மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் என்ற வகையிலான அறிக்கையொன்று அம்பாறை மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2020.09.03ஆம் திகதி சங்கமன் கந்தமுனை பிரதேச கடலில் 38 மைல் தொலைவில் மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீப்பிடித்துள்ளதுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை, விமானப்படை, கரையோர பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதும் தீயினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. அத்துடன் கொள்கலன் கப்பல் வெடித்து சிதற கூடிய சந்தர்ப்பமும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் வெடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.