நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பிரகாரம், எதிர்கட்சியினர் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வதன் மூலம் ஐக்கியமான நாடொன்றை கட்டியெழுப்புவதற்குரிய ஆணை தங்களுக்கு கிட்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் புதன்கிழமை (05) வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்நாட்டில் ஜனநாயகத்தையும், இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும், சகவாழ்வையும் விரும்புகின்ற அனைத்து இன மக்களுக்கும் இந்த பொதுத் தேர்தலின் ஊடாக நல்லதொரு மக்கள் ஆணையை வழங்குவதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் இயக்கத்திற்கு இத்தேர்தலில் பாரிய மக்கள் ஆதரவு கிடைக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பிரகாரம், எதிர்கட்சியினர் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வதன் மூலம் ஐக்கியமான நாடொன்றை கட்டியெழுப்புவதற்குரிய ஆணை எங்களுக்கு கிட்டும்.
இந்நாட்டின் சிறுபான்மை இனங்களும் சமத்துவமான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான வாய்ப்பை இந்த தேர்தலில் எதிர்பார்க்கின்றனர்.

நீண்டகாலமாக கொவிட் - 19 தொற்று நோயின் காரணமாக தேர்தல் பின்போடப்பட்டதால் தேர்தல் பிரசாரங்களில் சரிவர ஈடுபடுவதற்குரிய சந்தர்ப்பம் கிட்டாத போதிலும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான எங்களது கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை மேலோங்கியுள்ளது என்றார்.

இதன் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் ஹக்கீம் பதிலளித்தார்.

இந்த தேர்தலில் மிதக்கும் வாக்குகள் அண்ணளவாக எந்தளவு இருக்கும், அவற்றில் கணிசமான அளவு ஐக்கிய மக்கள் சக்தி அதிகமான வாக்குகளை பெறுவதில் செல்வாக்கு செலுத்துமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அது பற்றி யூகத்தின் அடிப்படையில் எதிர்வு கூறுவது கடினம் என்றும், அவற்றில் கூடுதலானவை எதிர்கட்சிக்கே கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியதோடு,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் பலமான அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் எதிர்கட்சிக்கு வாய்ப்பது ஜனநாயகத்தையும், இணக்க அரசியலையும் நிலைநாட்டுவதற்கு பெரிதும் உதவும் என்றார்.

தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளுமா என இன்னோர் ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதிலாக, மூன்றில் இரண்டை பெறுவதை விடுத்து, அறுதிப் பெரும்பான்மையை பெறுவது கூட அரசாங்கத்திற்கு அரிதான காரியமாகவே இருக்கும். இது பற்றி அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர் என்றார். 

அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆசனங்கள் கிடைக்குமா என்ற கேள்விக்கு, அநேகமாக கிடைக்கலாம். ஆனால், அதில் குறைவு ஏற்பட்டால் எங்களோடு ஒத்துழைக்க கூடிய ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவையும் பெற்று அதனை அடையப் பெறலாம் எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்துகொள்ளும் எண்ணம் இருக்கின்றதா என கேட்கப்பட்ட போது, அக்கட்சி தேய்வடைந்து கொண்டே செல்வதாகவும், அதன் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் வந்து சங்கமமாகும் நிலைமையே ஏற்படும் எனத் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற பின்னர் தங்களது கூட்டணி முன்வைத்துள்ள விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவோம் என அவர் உறுதிபடக் கூறினார்.