முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை, மலிவான விலைகளுக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை "முஸ்லிம் மொட்டுக்கள்" ஆரம்பித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி விசனம் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அக்கிரமங்கள், அழிவுகள், அடக்குமுறைகளுக்குப் பரிகாரமாக அரிசி, சட்டி, பானை, தையல் மெஷின்களை வழங்கும் இவர்களின் புதிய போக்குகள், "ஈமான்" மற்றும் "கலிமாவை" அடகு வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளாகும்.

முஸ்லிம்களை இவ்வாறு மலினமாக வழிநடத்தி, ராஜபக்ஷக்களின் விசுவாசிகளாவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இந்நிலைமைகளை தொடரவிட்டால், மெதமுலானையை தொழும் திசையாக மாற்றுவற்கும் இந்த முஸ்லிம் மொட்டுக்கள் தயங்கப்போவதில்லை. எனவே, இந்த வழிகேட்டு அரசியல் கலாசாரத்தை முஸ்லிம்கள் தோற்கடிப்பது அவசியம்.

ஒரு குடும்பத்தை மாத்திரம், தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்துவதற்கு இவர்கள் முயற்சிப்பது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, தனிநபர் வழிபாட்டுக்கே வழிகோலும். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நெருப்பில் சுட்டெரிக்கும், இஸ்லாத்துக்கு எதிரான கொடிய அரசு, இலங்கையைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லை. சிலர், தங்களது குடும்ப நலன்களுக்காக இதைக் கூட மறக்குமாறும் மன்னிக்குமாறும் கோருகின்றனர்.

அதிகாரமும் சுகபோகமும் தலைக்கேறிய இவ்வாறான முஸ்லிம் மொட்டுக்களின் போக்குகளால், முஸ்லிம் சமூகம் கொதிப்படைந்துள்ளது. கொசுவின் இறகளவேனும் பெறுமதியில்லாத, இவ்வுலகின் அற்ப, சொற்ப சுகங்களுக்காக, எந்த முஸ்லிமும் "ஈமானை" விட்டுவிடப் போவதில்லை.எனவே, சட்டி, பானைகள் வழங்கி, மெதமுலானையைத் தொழும் திசையாக மாற்றும் முஸ்லிம் மொட்டுக்களின் முயற்சிகள், ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. பள்ளிவாசல்களைப் பாதுகாக்க, கண்ணியமான "பர்தாவுடைய" வாழ்க்கையைப் பாதுகாக்க, முஸ்லிம்களின் "ஈமானைப்" பாதுகாக்க, குடும்ப வாரிசு அரசியலைத் தோற்கடிக்க அணிதிரளும் காலத்தேவையில், முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும்” என்றும் அஷாத் சாலி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.