சுஐப் எம்.காசிம் -
கிழக்கின் தனித்துவ கோட்டைக்குள் களமிறங்கியுள்ள தனித்துவ தலைமைகள் இருத்தலுக்கான இறுதிப் பிரயத்தனங்களுக்குள் இருப்பதாகத்தான் இத்தேர்தலைக் கருத வேண்டும். கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்தபடியான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள மாவட்டம் அம்பாறைதான். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமும் அம்பாறைதான். இதைக் கருத்திற்கொண்டுதான் இத்தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் வியூகங்களை வகுத்துள்ளன. மாவட்டத்தை வெல்வது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, மாவட்டத்தின் ஆளும் அதிகாரத்தைக் கையகப்படுத்துவது இவைகளைக் கொண்டுதான், முஸ்லிம் தனித்துவ ஆளுமை இம்மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இவற்றில் எவையும் சாத்தியப்படாத நிலைமைகளில் தனித்துப் போட்டியிட்டு, பேரம்பேசும் அடையாளத்தை, பலத்தைப் பாதுகாப்பது.
அஷ்ரப்பின் அந்திமகாலம் வரை பின்பற்றப்பட்டு வந்த இந்நடைமுறைகள், இத்தேர்லில் பின்பற்றப்படுகிறதா? என்பதுதான் இன்றைய கேள்வி. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரப்பின் இந்த இலட்சியத்தை வெல்வதற்காகத்தான், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகிறது. இதில் ஏனைய தனித்துவத் தலைமைகளைப் புறந்தள்ள இக்கட்சி எடுக்கும் பிரயத்தனங்கள், கிழக்குக் களத்தை நெருப்பாக்கி வருவதால், தேசிய காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் தாங்களே அஷ்ரப்பின் உண்மையான அரசியல் சித்தாந்தத்தை உயிரூட்டும் சிந்தனைகளைக் கையிலெடுத்துள்ளதாகக் கூறி, சொந்தச் சின்னங்களில் போட்டியிடுகின்றன. உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் ஆளும்பலத்தை தக்க வைப்பதென்ற அரசியல் போக்கு, இம்முறை எப்படிச் சாத்தியமாகும் என்பது இதுவரைக்கும் புரியாமலேயுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும், ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுடன், தேசிய காங்கிரஸுக்கு இம்முறை ஏற்படாத இணக்கமும்தான், பெரும்பான்மைக் கட்சிகளின் மாவட்டப் பலத்தை கட்டியங்கூறுவதைச் சிக்கலாக்கியுள்ளது. இதனால், பங்காளியைப் பற்றிப் பயப்படாது, அதன் பலத்தைப் பொருட்படுத்தாது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்தப் பலத்தை நம்பிப் புறப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தியையும் இழுத்துக்கொண்டு பயணிக்கிறது. அம்பாறை மாவட்டத்திலுள்ள சுமார் 260,000 முஸ்லிம் வாக்குகளில் அதிகளவைப் பெறுவதுடன், சஜித் அணியிடமிருந்து தொலைபேசிக்கு கிடைக்கும் கணிசமான சிங்கள வாக்குகளும், மாவட்டத்தை வெல்லப் பங்களிக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது. இந்நம்பிக்கை வெற்றியளித்தால் மாவட்ட வெற்றியுடன் பிரதிநிதித்துவ வெற்றியையும் சாதகமாக்குவதுதான் தனித்துவத் தலைவரின் திட்டம். இத்திட்டம் கை கூடினால், ஏனைய முஸ்லிம் தலைமைகள் கிழக்குக் களத்தில் தனித்துவிடப்படும் நிலைமைகள் ஏற்படவே செய்யும்.
இவ்வாறு கடும் இறுக்கமாக நகரும் களத்திற்குள் தேசிய காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கையைக் கட்டிக்கொண்டா நிற்கப் போகின்றன? நிச்சயமாக இல்லை. தென்னிலங்கையை நாடிபிடிக்கும் எந்தத் தேர்தலிலும் (2015 தவிர) தோற்காத தேசிய காங்கிரஸ், மிகப்பெரிய திட்டத்துடனேயே இம்முறை குதிரையை ஓடவிட்டுள்ளது. இம்முடிவில் பெருமிதம்கொண்டு, மாவட்டத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் சாத்திய அரசியலுக்கான சாத்வீகப் போருக்கு தேசிய காங்கிரஸ் அழைப்பும் விடுக்கிறது. வியூகத்தில் வென்றால் தனித்துவத்துக்கு வெற்றி, மாவட்டத்தின் ஆளுமை அதிகாரத்துக்கு வெற்றி, அஷ்ரப்பின் சிந்தனைக்கு வெற்றி என்று பெருமிதம் பேசக் காத்துள்ளது இக்கட்சியின் தலைமை. இதில் ஒரு விடயத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ராஜபக்ஷக்களின் நண்பராகவுள்ள தேசிய காங்கிரஸ் மாவட்டத்தை வென்றால், மாவட்ட ஆளுமையுடன் கூடிய அமைச்சுப்பதவி கிடைக்கும் என்பதுதான் அது. மாறாக ஒரு பிரதிநிதித்துவத்தை மாத்திரமே வெல்லும்பட்சத்தில், அமைச்சுப்பதவியுடன் மாத்திரம் இக்கட்சியின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, தனித்துவ அடையாளம் பலவீனமடையலாம்.
ஆனால், ஏனைய முஸ்லிம் தலைமைகளின் மாவட்ட வெற்றியானது, சமூக அடையாளத்துடன் மாத்திரம் மட்டுப்படுமே தவிர, மாவட்டத்தின் ஆளுமை அரசியலைக் கோர முடியாத நிலைமைகளே ஏற்படும். எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு (மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை, இணைப்புக் குழுத் தலைமை) என்பவற்றைக் கோர முடியாதென்ற யதார்த்தத்தை வாசகர்கள் உணர வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதுதான் சாத்தியம்.
மாறாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைப் பிடித்தால், இச்சூழல் தலைகீழாகும். கடந்த முறையைப் போலன்றி, முஸ்லிம் தனித்துவ அடையாளத்துடன் அம்பாறை மாவட்டத்தின் ஆளும் அதிகாரத்தையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையகப்படுத்தும். ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை, இவையெல்லாம் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. வன்னி மாவட்டத்தில் எந்தச் சவால்களுமில்லாது வீறுநடை போடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைக்கு, அம்பாறை மாவட்டம் புதிதுமில்லை. நல்லாட்சி நாயகர்களில் ஒருவரான இவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளால்தான் அம்பாறையில் தோற்கடிக்கப்பட்டார். தேசிய அங்கீகாரத்துக்கான அடையாளமாகத்தான் இக்கட்சி இங்கு போட்டியிடுகிறதே தவிர, மாவட்ட ஆளுமையைப் பற்றி இக்கட்சிக்குப் பொருட்டுமில்லை. முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றெடுத்தால், தேசியம் முழுதும் தனித்துவ உரிமை கோரும் தலைவருக்கு தக்கபாடம் புகட்டலாம் என்பதுதான், இக்கட்சித் தலைமையின் திட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இத்திட்டத்துடன்தான் இக்கட்சி போட்டியிடுகிறது. தமிழர் பெரும்பான்மை மாவட்டமான இங்கு, தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், மரச் சின்னத்தில் தனித்துவ முகங்காட்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், புதிதாக அடையாளம் தேடும் வண்ணத்துப் புச்சியும் சமூக அடையாளத்தைப் பலப்படுத்த முடியாதென்ற புறச்சூழல் பின்னணியில், பிரதிநிதியையாவது வென்று, இருப்பைத் தக்கவைக்கவே முயற்சிக்கின்றன.
திருமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை. இவ்விரு தலைமைகளும் ஓரணியில் குதித்து ஒற்றுமையைக் காட்டியுள்ளமை, இருப்புக்கான முயற்சியேயன்றி, சமூக அடையாள அரசியலுக்கல்ல. இம்முயற்சி சமூக அடையாளமாக இருந்திருந்தால், மரம் அல்லது மயில் சின்னத்தில் இணைந்திருப்பர்.
எனவே, மிக முக்கியமான ஒரு கட்டத்தில் நடைபெறும் இத்தேர்தலில், சிங்களப் பெருந்தேசிய எழுச்சிபற்றியும், இதை எதிர்கொள்வதற்கான பாராளுமன்றப் பலம் குறித்தும் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்திருக்க வேண்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் ராஜபக்ஷக்களின் முயற்சிகளுக்குத் தேவைப்படவுள்ள எஞ்சிய ஆசனங்களை, முஸ்லிம் தலைமைகள் தனித்த ஒரு அடையாளத்தில் வைத்திருந்தால், கடந்தகாலக் கசப்புக்களைக் களைவதற்கான சன்மானமாக இந்த ஆதரவை வழங்கப் பயன்படுத்தலாம். ‘அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பருமில்லை’ என்ற யதார்தத்தைப் புரிந்து பயணிக்கும் அரசியல் சூழலையே, சிங்களப் பெருந்தேசிய எழுச்சி ஏற்படுத்தியுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK