பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களைப் பெறுவதென்பது தேசிய மக்கள் சக்திக்கு இலகுவான விடயம். நாங்கள் 140 இற்கும் அதிகமான ஆசனங்களை இலகுவாகப் பெறவோம். மக்கள் ஆதரவு எமக்கு உள்ளது’ என்று கூறுகிறார் தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் ஏ. எம். முபாரக்.
கேள்வி: உங்களை பற்றிக் கூறுவீர்களா?
பதில்: நான் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஹொரவப்பொத்தானை நிக்கவையைச் சேர்ந்தவன். எனது ஆரம்பக் கல்வியை அங்குதான் பயின்றேன். மார்க்கக் கல்வியை கிண்ணியாவில் கற்றுக் கொண்டேன். 1992 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்றேன். ஆசிரியர் துறையில் 20 வருடங்களும், அதிபராக 13 வருடங்களும் சேவையாற்றியுள்ளேன்.
கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றிக் கூற முடியுமா?
பதில்: நான் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு இருந்தது. அன்றைய காலப்பகுதியில் காமினி திஸாநாயக்க, லலித் போன்றவர்களின் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அதன் பின்பு முஸ்லிம் காங்கிரசில் 23 வருடங்கள் பிரதேசசபை உறுப்பினராக இருந்தேன். மாகாண சபை வேட்பாளராகப் போட்டியிட்டதுடன், அனுராதபுரம் மாவட்ட உயர்பீட உறுப்பினராகவும், மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து மக்களுக்குச் சேவையாற்றியுள்ளேன் .
கேள்வி: அநுராதபுரத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலை தற்போது எவ்வாறு உள்ளது?
பதில்: ஜனாதிபதித் தேர்தலின் போது காணப்பட்டதை விட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இம்முறை அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 70 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கேள்வி: இம்முறை அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை உறுப்பினர் ஒருவரை பாரளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க முடியுமா?
பதில்: நிச்சயமாக முடியும். சிறுபான்மை சமூகம் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளது. தேசிய மக்கள் சக்தி இனவாதம், மதவாதம் இல்லாத கட்சியாகும். இந்தக் கட்சி என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சிறுபான்மை உறுப்பினர் நான் ஒருவர்தான். அந்த வகையில் எமது கட்சிக்கு வாக்கு வழங்கும் சகல சிறுபான்மை மக்களும் எனக்கும் ஒரு வாக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதேபோல பெரும்பான்மையின மக்களும் எனக்கு வாக்கு வழங்குவார்கள். இம்முறை அநுராதபுரத்தில் சிறுபான்மை உறுப்பினர் ஒருவரை பாரளுமன்றத்திற்கு அனுப்ப முடியும். அநுராதபுரத்தில் சிறுபான்மை உறுப்பினர் ஒருவரை பாரளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கக்கூடிய பலம் தேசிய மக்கள் சக்திக்கு மட்டுமேதான் உள்ளது.
கேள்வி: அநுராதபுரத்தில் சிறுபான்மை உறுப்பினர் ஒருவர் ஊடாக மாவட்டம் அடைந்த நன்மை என்ன?
பதில்: உண்மையில் சில அபிவிருத்திகள் இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை என்பதுதான் உண்மை. அதை என்னால் மாற்ற முடியும்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி எவற்றை மையப்படுத்தி வேட்பாளர் பட்டியலைத் தயாரித்துள்ளது?
பதில்: இதுவரை காலமும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது, அவர்களுடைய பணபலத்தை மட்டும் வைத்ததுக்கொண்டுதான் தெரிவு செய்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி அவ்வாறு பணபலத்தை மட்டும் வைத்து வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமல், மக்களின் தேவை அறிந்து துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்துள்ளது. உதாரணமாக கல்வி தொடர்பாக அதிபர்களையும், நீதி தொடர்பாக சட்டத்தரணிகளையும், விவசாயம் தொடர்பாக அந்தத்துறை சார்ந்தவர்களையும் தெரிவு செய்துள்ளது.
கேள்வி: உங்களை மக்கள் இத்தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் காரணங்கள் எவை?
பதில்: இங்குள்ள ஏனைய கட்சி வேட்பாளர்களை விட நான் அரசியல் அனுபவம் கூடியவன். சுமார் 30 வருட கால அரசியல் அனுபவம் உடையவன். அதேபோல சமூக சேவைகளில் நான் அதிகம் ஈடுபாடு உள்ளவன். கல்வி அனுபவம் அதிகமாக உள்ளதால், இந்த மாவட்டத்தில் கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்ல என்னால் முடியும். அதேபோல இந்த மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அதிகம் அறிந்தவன் என்ற வகையில், அதற்கான தீர்வுகளை இலகுவாக என்னால் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கமுடியும். இந்த நம்பிக்கையில் மக்களுக்காக பாரளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இதுவரை எமது மாவட்டத்தில் இருந்து பாரளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கல்வியை மேம்படுத்த நடவடிக்ைக மேற்கொள்ளவில்லை. அதற்கான சரியான திட்டமும் அனுபவமும் என்னிடத்தில் உள்ளன.
கேள்வி: இம்முறை தேசிய மக்கள் சக்தி அநுராதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்களைக் கைப்பற்றும்?
பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால், ஐந்து ஆசனங்கள் கிடைக்குமென நம்புகிறேன். இம்முறை எமக்குச் சாதகமான அலை அதிகரித்து உள்ளது. ஆகவே மொத்தம் ஒன்பது ஆசனங்களில் ஏழு அல்லது எட்டு ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
கேள்வி: 113 ஆசனங்களை பெறாத சந்தர்ப்பத்தில் எவ்வாறான நடவடிக்கைளை தேசிய மக்கள் சக்தி எடுக்கும்?
பதில்: 113 என்பது இலகுவான விடயம். நாங்கள் 140 ஆசனங்களுக்கு மேல் இலகுவாகப் பெறவோம். மக்கள் ஆதரவு எமக்கு உள்ளது. கடந்த முறை எமக்கு வாக்கு வழங்காதவர்கள் பின்னர் கவலைப்பட்டனர். அவர்களுடைய வாக்குகள் எமக்குத்தான். ஆகவே 113 என்பது இலகுவான விடயம். அதையும் மீறி எமக்கு 113 இற்கும் குறைவான ஆசனங்கள் கிடைத்தால் எமது கொள்கைகளோடு ஒத்துப் போகும் ஏனைய தரப்பு உறுப்பினர்களை நாம் எமது அணியில் இணைத்துக் கொள்வோம். ஆனால் அப்படியான ஒரு சந்தர்ப்பம் ஒருபோதும் வராது.
கேள்வி: மக்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தமைக்கான முக்கிய காரணம் கடந்த அரசின் ஊழல் மற்றும் விலைவாசி அதிகரித்து இருந்ததனால் ஆகும். ஆனால் இந்த அரசு வந்த பிறகும் விலைவாசி குறைந்ததாக இல்லையென மக்கள் கூறுகின்றனர். அதற்கான காரணம் என்ன?
பதில்: உண்மைதான். கடந்த அரசின் காலத்தில்தான் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டன. அதனை ஒரே தடவையில் குறைக்க முடியாது. அதற்கு சிறிது காலம் எமக்குத் தேவை. எதிர்காலத்தில் விலைவாசி கட்டயமாக குறையும். அதற்கான நடவடிக்கைளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். அதனால் எமது இலக்கான ‘அழகான வாழ்வு, வளமான நாடு’ ஒன்றை எதிர்காலத்தில் நீங்கள் பார்க்க முடியும்.
கேள்வி: அநுராதபுரம் மாவட்ட மக்களுக்கு இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: பெரும்பான்மை மக்கள் இப்போது ஜனாதிபதியுடன் இருக்கின்றனர். இம்முறை பாரளுமன்றத் தேர்தல் என்பது ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்தக் கூடிய தேர்தல் ஆகும். எனவே அவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமை. தற்போதுள்ள அரசு வீண்விரயத்தைக் குறைத்துள்ளது. ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு உங்கள் வாக்குகளை வழங்கி அரசின் கைகளைப் பலப்படுத்துங்கள்.
அஸீம் கிலாப்தீன்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK