- பல அடுக்கு பாதுகாப்பு ; 65,000 க்கும் மேல் போலீசார் கடமையில்
- தேர்தல் விதிமுறைகளை மீறினால் சிறை தண்டனை
- ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி
- வாக்களிப்பு நிலையங்கள் 13,421
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 22 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
தேர்தல் சட்ட திட்டங்களை மீறி செயல்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சகல மக்களும் அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டுமென R. M. A. L. ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையத்துக்குள் வாக்களிப்பவர்கள் மாத்திரமே செல்ல வேண்டும். வாக்களிப்பு நிலையத்தினுள்ளும் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களுக்குள்ளும் கையடக்க தொலைபேசிகளுடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உள்ளே படம் எடுப்பதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
“காணொளி பதிவேற்றுதல், ஆயுதங்களை தன்வசம் வைத்திருத்தல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், போதைப் பொருள் பாவித்து விட்டு வாக்களிப்பு நிலையத்துக்குள் வருதல்…. ஆகின தவிர்க்கப்பட வேண்டியதோடு தண்டனைக்குரிய குற்றமாகும்.” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
நாளை காலை 7:00 மணிக்கு வாக்களிப்போம் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நிறைவடையும். வாக்குகளை எண்ணும் செயற்பாடுகள் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என்பதுடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பிற்பகல் 4.15 மணியளவில் ஆரம்பமாகும். வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இடம்பெறும் வன்முறைகள், முரண்பாடுகளை தடுப்பதற்காக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பாதுகாப்பு பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக” தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்களிப்பு செயற்பாடுகள்
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நியமிக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் குறிப்பிட்ட தினத்தில் உரிய இடங்களுக்கு கட்டாயம் கடமைக்கு வரவேண்டும். சேவைக்கு வராமல் தவிர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தேசிய அடையாள அட்டை (பழையது அல்லது புதியது), உத்தியோகப்பூர்வ கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வு அடையாள அட்டை, முதியோருக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்தும் புகைப்படுத்துடனான கடிதம், தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொரு அடையாள அட்டையை வாக்களிப்பு நிலையத்துக்கு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோன்று, தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுக்கள் , திணைக்களங்கள், அரச நிறுவனங்களால் வெளியிடப்படும் சேவை அடையாள அட்டை உள்ளிட்ட வேறு எந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதேபோன்று வாக்களிப்பு நிலையத்துடன் தொடர்புடைய வாக்காளர்கள், வாக்களிப்பு நிலைய பணியாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்களில் பிரிதிநிதிகள், அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள், பிரதேச பிரதிநிதிகள், வாக்களிப்பு நிலைய பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், தெரிவத்தாட்சி அதிகாரியின் அனுமதியுடைய வேறு அதிகாரிகளை தவிர வேறு எவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்ளில் தொலைபேசி பயன்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல், ஆயுதங்களை எடுத்து செல்லுதல், புகைத்தல், போதைபொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு காரணத்துக்காகவும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்தல் அதனை காட்சிப்படுத்துதல் அல்லது வாக்களிப்பு நிலையங்களில் அவற்றை யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்களிப்பு நிலையத்துக்கு நுழையும் வாயிலிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் எவராலும் தேர்தலை விமர்சித்தல், வாக்காளர் ஒருவரிடம் வாக்கை கோருதல் , பெயர்குறிப்பிட்டு வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு அறிவித்தல், துண்டு பிரசுரம், அறிவிப்புகள், புகைப்படங்கள், சித்திரங்கள், விளம்பரங்கள், வேட்பாளர்களின் சின்னங்களை வேட்பாளர்களுக்கு பகிருதல் காட்சிப்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறினால் தண்டனை பெற்றுக் கொடுக்கவும் முடியும்.
வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பு
வாக்கு பெட்டிகளுக்கு தனியான இலக்கங்கள் வழங்கப்படும். அந்த இலக்கங்களினூடாக சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். சகல வாக்களிப்பு நிலையங்களிலும் அதிகாரம் வழங்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். வாக்களிப்பு செயற்பாடுகள் நிறைவடைந்ததும் சகல வாக்கு பெட்டிகளும் முத்திரையிடப்படும். வாக்கு பெட்டிகளுக்கு முத்திரையிட்டதன் பின்னர் அவற்றை பொலித்தீனால் பொதியிட்டு அதனையும் முத்திரையிட நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களிக்கும் முறை
ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் யாராவது ஒரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்;கு அருகிலுள்ள பெட்டியில் இலக்கம் 1 ஐ குறிப்பிட வேண்டும். அதேபோன்று யாராவது வேட்பாளருக்கு விருப்பு வாக்களிப்பது என்றால் இரண்டாம் விருப்பு வாக்கை இலக்கம் 2 என்று குறிப்பிட்டும் மூன்றாவது விருப்பு வாக்கை இலக்கம் 3 என்றும் குறிப்பிட்டு வாக்களிக்க முடியும். புள்ளடியிடுவதும் இந்தத் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காக கருதப்படும்.
வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தவிர்த்தல், ஒரு வேட்பாளரை விட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களுக்கு வாக்களித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காக கருதப்படும். ஒரு வேட்பாளருக்கு இலக்கம் 1 உம் இன்னுமொரு வேட்பாளருக்கு புள்ளடி இடுதல், இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகளை மாத்திரம் அடையாளமிடுதல், வாக்குச் சீட்டில் எழுதுதல் அல்லது வரைதல், விருப்பமான வேட்பாளர் ஒருவருக்கு புள்ளடி இட்டதன் பின்னர் விருப்பு வாக்கு தெரிவு செய்ய முடியாது, புள்ளடியுடன் 2 அல்லது 3 விருப்பு வாக்குகளை வழங்குதல் , 1,2,3 ஐ விட அதிக எண்ணிக்கையான தெரிவுகள் ஆகிய சந்தர்ப்பங்களில் அந்த வாக்கு செல்லுப்படியற்றதாக்கப்படும்.
சகல வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் சகல வேட்பாளர்களினதும் பிரதிநிதிகள் ஐவர் வீதம் இருக்க முடியும். தபால் மூல வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் இருவர் வீதம் இருக்க முடியும். வாக்கு எண்ணும் செயற்பாடுகளை அவர்கள் கண்காணிக்க முடியும். அவர்களின் நிலைப்பாடுகளை வாக்கு எண்ணும் நிலையத்துக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கு குறிப்பிட முடியும். கணக்கெடுப்பின் இறுதி முடிவுகளின் பிரதியொன்று அங்கு காட்சிப்படுத்தப்படும்.
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலுள்ள அதிகாரிகள், கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடுதல், நிலைப்பாடுகளை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாக்களித்து இறுதி முடிவுகள் வெளிவரும் வரை எந்தவொரு வேட்பாளரையும் பரபல்யப்படுத்தவோ அல்லது அவர்களை பாரபட்சம் காட்டும் வகையிலான எந்தவொரு பிரசாரங்களையும் செய்யக் கூடாது.
21 ஆம் திகதியாகும்போது சகல தேர்தல் பிரசார அலுவலகங்களும் நீக்கப்பட வேண்டும். அரச, தனியார் துறை பணியாளர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு முறையான விடுமுறையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் நடவடிக்கை
21 ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் கிடைத்தவுடன் மாலை 7 மணியாகும்போது மாவட்டங்களிலுள்ள அந்தந்த வாக்கு எண்ணம் மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் செயற்பாடுகள் இடம்பெறும். தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மாலை 4.15 மணியளவில் ஆரம்பமாகும்.
கணக்கெடுப்புகளின் அடிப்படையில் முடிவுகளை ஊடகங்களினூடாக மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ வாக்குகள் வெளியாவதற்கு முன்னர் உத்தியோகப்பூர்மற்ற வாக்குகளை வெளியிடும் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது.
ஜனாதிபதி தெரிவு
முதலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணப்படும். அதனை வாக்களிப்பு பிரதேசம் மாவட்ட மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்படும். அதன் முடிவுகள் தேர்தல் செயலகத்துக்கு கிடைத்ததன் பின்னர், தேர்தல் செயலகத்தினாலேயே மொத்த வாக்குகள் கணக்கெடுக்கப்படும். வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் செல்லுப்படியான வாக்குகளில் ஏதாவதொரு வேட்பாளருக்கு 50 அல்லது 51 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதா என்று பரிசீலிக்கப்படும்.
அப்படி கிடைத்திருந்தால் அத்துடன் கணக்கெடுப்புகள் நிறைவு செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி அறிவிக்கப்படுவார். ஒருவேளை எந்த வேட்பாளருக்கும் 50 அல்லது 51 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டி ஏற்படும். அதன்போது அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் இருவரையும் முன்னிலை போட்டியாளர்களாக கருத்தில் கொண்டு ஏனைய 36 வேட்பாளர்களையும் போட்டியிலிருந்து நீக்குவோம். அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் கிடைத்த விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தல்
இறுதி முடிவுகள் கிடைக்கும் வரை பொறுமையாக செயற்பட வேண்டும். மழு நாட்டுக்கும் உரிய தேர்தல் என்பதால் இறுதி வாக்கு அறிவிப்புகளில் காலதாமதம் ஏற்படலாம். வாக்களிப்பு சந்தர்ப்பம், வாக்களிப்பின் பின்னர், வாக்கு எண்ணும் செயற்பாடுகளின் போது சகலரும் வீடுகளில் இருக்க வேண்டும். வாக்களிப்பு நிலையங்களில் ஏதாவது முரண்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் செயற்பாடுகள் பூச்சியமாக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு மேற்கொள்ளப்படும். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் நடமாடுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு சகல பாதுகாப்பு பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK