சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஊடகவியளாளர் யாக்கூபின் முகநூலில் இருந்து

 


அஷ்ரபும் நானும்.....

(அவர் பற்றிய மறக்க முடியாத எனது ஊடக நினைவுகள்)

“அஷ்ரப்” எனும் ஆளுமை  இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்த ஒரு மகா சக்தி எனலாம். குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஒரு புதிய முகவரியை தேடிக் கொடுத்தவர். இந்த நாட்டு அரசியலில் முதன் முறையாக முஸ்லிம்களை பங்காளிகளாக்கி ஆட்சியை தீர்மானித்த ஒரு பெரும்  கிங்க் மேக்கராக திகழ்ந்தவர். அவர் மறைந்து இருபத்தி மூன்று வருடங்களாகின்றன.

 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி காலை நேரம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். எனது பிறந்த ஊரான நிந்தவூரில் கடார் இப்ராஹிம் என்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு... தம்பி யாக்கூப்  தலைவர் அஷ்ரப் விமான விபத்தொன்றில் சிக்கி விட்டதாக ஒரு கதை வந்தது. இது உண்மையா.....? “ஆமாம்... உண்மைதான்.... உண்மை போல தான் இருக்கிறது. அது விமானம் அல்ல ஹெலிகொப்டர். அவ்வளவுதான் இப்போதைக்கு தெரியும். அதனால் தான் அலுவலகத்தில் இருந்தும் எனக்கு அங்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. சென்று  நிலைமையை  பார்த்து உறுதிப்படுத்துகிறேன் என்று பதிலளித்துவிட்டு ரூபவாஹினியை வந்தடைந்தேன். செய்திப் பிரிவுக்குள் நான் பிரவேசிக்கும் போதே அங்குள்ள சகோதர மொழி நண்பர்கள்... உங்கள் பெரியவருக்கு (லொக்கா) என்ன நடந்து விட்டது என்று கதை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கதை தொடர்ந்தது..... பின்னர் ஒரு சில நிமிடங்களில் பாதுகாப்பு அமைச்சு அவரது மரணச் செய்தியை உறுதிப்படுத்தியது. அதிர்ச்சி... ஆச்சரியம்.... துக்கம்.... துயரம் இவைகளுடன் அன்றைய நாள் ஆரம்பித்தது. அவர் மரணித்து விட்டாரா என்பதை  உறுதிப்படுத்தும் நோக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் எமது செய்திப் பிரிவுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அனைத்துக்கும் பதில் அளித்துக் கொண்டிருந்தோம். இதற்கிடையே விசேட “பிரேக்கிங் நியூஸ்” அவசர செய்தி ஒளிபரப்பிற்காகத் தயாரானோம். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு அஷ்ரப் மரணித்து விட்டார் என்ற அவரின் மரணச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.


 அனைவரும் அஷ்ரப் என்ற ஆளுமையை பெரும் அரசியல் சக்தியாகவும் அதிகாரம் கொண்டவராகவும் பார்த்த போதிலும் ஊடகவியலாளர்களான என் போன்றவர்களுடன் மிக இயல்பாகவும்   எளிமையுடனும் நட்புடனும் கலை ரசனையுடனும் அவர் எப்போதும் உறவாடுவது வழக்கம். ஒரு ஊடகவியலாளனுக்கு அவர் வழங்கிய மரியாதையையும் கௌரவத்தையும் முதன்மையான இடத்தையும் எனது  நாற்பது வருட ஊடக வாழ்வில் எந்த ஒரு அரசியல் தலைவனிடமும் நான் இதுவரை கண்டதில்லை. தொலைபேசி அழைப்பு ஒன்று எடுத்தால் எவ்வளவு பிசியாக அவர் இருந்த போதிலும் உடன் பதிலளிப்பது அவரது இயல்பான ஒரு குணமாகும். அவ்வாறு முடியாத போது கூட திருப்பி அழைத்து நாம் எடுத்த நோக்கம் பற்றி  வினவுவார்.  அப்படியான ஒரு கண்ணியமான பண்பு  ஊடகவியலாளர்களோடு அவருக்கு இருந்தது. சமூகத்தின் அரசியல் எதிர்காலம் பற்றியும் முஸ்லிம் பிரதேசங்களின் தேவைகள் குறித்து சதா சிந்திப்பதும் அது பற்றி அளவளாவுவதுமே அவரது சிந்தனையாக இருந்து வந்தது.    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அவரது அரசியல் கட்சியின் பெயரில் உள்ள “முஸ்லிம்” என்ற வார்த்தை இந்த சமூகத்திற்கு சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி இறுதி நேரத்தில் அவருடைய சிந்தனையில் அடிக்கடி எழுந்த ஒன்றாகும். அதன் விளைவுதான் இறுதி நாட்களில் தோற்றுவிக்கப்பட்ட ”நுஆ” என்ற தேசிய ஒற்றுமை முன்னணி ஆகும். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் என்னைப்போலவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் ஆசிரிய பீடத்தை சேர்ந்த  சகோதர ஊடகவியலாளர் நண்பர் சுஐப் எம் காசிமுடனும்  அநேக சந்தர்ப்பங்களில் அவர் பேசியிருக்கிறார். 

ஜாவத்தை ஜும்மா பள்ளிவாசல் விடுதியில் ஆரம்ப காலங்களில் 85 களில் நாம் தங்கி இருந்தபோது எமது அறைகளுக்கு அவர் வந்து  போகக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அவ்வளவுக்கு எளிமையான ஒரு மனிதர் அவர். 


அவரை முதன் முதலில் நான் கண்டது 1981 ஆம் ஆண்டில் உயர் வகுப்பு மாணவனாக கணித டியூஷன் வகுப்புக்காக கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு செல்வதற்காக பஸ் தரப்பில் நின்ற போது ஒரு  வொக்ஸ் வெகன் கார் வந்து நின்றது. அதிலிருந்த ஒரு அழகிய தாடியுடன் கம்பீரமாக காட்சி தந்த அந்த மனிதர் என்னுடன் இன்னும் ஒரு சிலரையும் ஏற்றிக்கொண்டு கல்முனையில் இறக்கி விட்டுச் சென்றார். அந்த கணமே அவருடைய சமூக அக்கறையும் உணர்வும் எமக்குள்  தெளிவாகியது.   அதனைத் தொடர்ந்து இன்னொரு தினம் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் அப்போதைய அதிபர் சகோதரர் மெத்தியூஸ் தலைமையில் இடம்பெற்ற கல்முனை கல்வி மாவட்ட  பாடசாலை  உயர் வகுப்பு மாணவர் ஒன்றிய  தலைவர்களுக்கிடையிலான ஒன்று கூடலில் ஒரு அதிதியாக அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் நிந்தவூர் அல்அஷ்ரக் உயர்தர பாடசாலை உயர் வகுப்பு மாணவர் ஒன்றியத்தின் தலைவன் என்ற ரீதியில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நிகழ்வு அவரை சந்தித்த இரண்டாவது தருணம் ஆகும். 

அதற்குப் பின்னால் 1985 ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தயாரிப்பாளராக நான் இணைந்து கொண்டு பணியாற்றத் தொடங்கியது முதல் அவருடனான உறவு மென்மேலும் வளரத் தொடங்கியது. 

1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை தொடர்ந்து சந்திரிகா அரசுடன் ஒரு பங்காளியாக இணைந்து  ஒரு புதிய அரசை அவர் தோற்றுவித்த போது துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அவர் பதவியேற்றார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சராக அவரை முதன் முதலில் தொலைக்காட்சி கேமராவுக்காக பேட்டி கண்ட அந்த வரலாற்று நிகழ்வு இன்னும் மறக்க முடியாதது. அவர் எழுதிய “நான் எனும் நீ” என்ற மாபெரும் கவிதை நூல் பற்றிய நிகழ்வை ஒரு விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்குமாறு அவர் விடுத்த அன்புக் கோரிக்கையை ஏற்று தேசிய தொலைக்காட்சியில் நான் ஒளிபரப்பிய நிகழ்ச்சி இன்னுமொரு மகிழ்ச்சியை தரும் சம்பவமாகும். 

தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அவரது கனவும் நோக்கமும் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தும் பணி இடம் பெற்ற வேளையில் அது பற்றிய தரவுகளை என்னிடம் தந்து  விவரணம் ஒன்றை தயாரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டார். ஒலுவில் பல்கலைக்கழக கட்டுமானப் பணிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை ஒரு விவரணமாக தயாரிக்கும் பணியில் நான் ஈடுபட்ட போது அடிக்கடி அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இன்னும் அதிகமாகியது. அந்த நிகழ்ச்சியும் இன்றும் கூட மன நிறைவைத் தந்த ஒன்றாகும். கல்விச் சமுதாயத்திற்காக அவர் வழங்கிய அந்த வரலாற்றுப் பணியில் பங்கெடுத்த ஒரு ஆத்ம திருப்தி எனக்கும் இருக்கிறது.

அவர் பற்றி எழுதப்பட்ட நூல்கள் தொடர்பிலும் அவ்வப்போது நிகழ்ச்சிகளை தயாரிக்கும் வாய்ப்பு மற்றும் அவரை கலையகத்தில் அழைத்து செவ்விகாணும் சந்தர்ப்பமும் கிடைத்தது. 


இறுதியில் அவரது உயிர் பிரிந்த இறுதி நாளன்று அவரது மறைவையும் ஜனாஸா நல்லடக்கத்தையும் இந்த நாட்டு மக்கள் நேரடியாக பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  பதில் பணிப்பாளர் நாயகமாக இருந்த எஸ். மனோரஞ்சனுடன்  பேசினேன். அடுத்த கணமே அன்றைய ஊடகத்துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவைத் தொடர்பு கொண்டு அந்த இறுதி நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புச்  செய்யும் வாய்ப்பை  நம் சமூகத்துக்கு என்னால் பெற்றுக் கொடுக்க முடிந்தமை காலத்தால் அழியாத ஒரு ஊடகப் பணியாகும். இந்த நாட்டின் ஒரு முஸ்லிம் தலைவருடைய இறுதிப் பயணம் தேசிய தொலைக்காட்சி ஒன்றில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வரலாற்று நிகழ்வு அதுவாகவே பதியப்படுகின்றது. அவரது இல்லத்தில் இருந்து ஜாவத்தை ஜும்மா பள்ளிவாசல் வரை எமது கேமராக்கள் ஜனாஸாவை  பின்தொடர்ந்தன. தமிழ் மொழியில் நானும் சிங்களத்தில் வானொலி அறிவிப்பாளர் மயூரி அபேசிங்கவும்  நேரடி அஞ்சலி நிகழ்வுகளை   வழங்கிக் கொண்டிருந்தோம்.  அப்போது  அஷ்ரப் அவர்களின் ஜனாஸாவின் அருகே நின்றிருந்த ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரில் மூவரை மட்டும் நான் தெரிவு செய்து கொண்டேன். அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள்  ரவூப் ஹக்கீம் மற்றும் மருதூர்க்கனி இவர்களுடன் மூன்றாமவர்  எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இந்த மூவரையும் அந்த இடத்தில் கமராவிற்கு முன்பாக அழைத்து வந்து  அவர்களது செவ்விகளை  ஒளிபரப்பியது இன்றும் மறக்க முடியாத உணர்வு பூர்வமான  ஒன்று. அப்போது சகோதரர் ரவூப் ஹக்கீமிடம்  நான் கேட்ட முதலாவது கேள்வி..... ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  என்ற பேரியக்கத்தை ஸ்தாபித்து இன்று அஷ்ரப் அவர்கள் திடீரென்று மறைந்து விட்ட நிலையில் இந்தக் கட்சியை எதிர்காலத்தில் முன் கொண்டு செல்லப் போகும் அடுத்த தலைவரை எப்படி தீர்மானிக்கப் போகின்றீர்கள்... என்பதே ஆகும்.

 இறுதியாக அந்தக் கட்சியின் தலைவராக அவரே தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயமே. 


அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை. மனம் எதையோ இழந்து விட்டது போன்ற பிரமை. இந்த மறைந்த மனிதனுக்கு நமது ஊடகப் பக்கத்தால் வரலாறு பேசக்கூடிய வகையில்  ஒளிப்படங்களால் ஒரு செய்தியை சொல்ல வேண்டும். அவரது தலைமைத்துவம், ஆளுமை, தூர நோக்கு மற்றும் அவரது அரசியல் செயற்பாடுகள் அடங்கிய படங்களைத் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. அடுத்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை முதல் பணியாக எமது ரூபவாஹினி கூட்டுத்தாபன பிரதான நூலகத்தில் சம்பந்தப்பட்ட படங்களைத் தேடும் எனது பணி தொடர்கிறது. ஒரு அரை மணி நேர விவரண நிகழ்ச்சிக்காக Editing  தொகுக்கக்கூடிய  அளவிற்கு அசையும் படங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு விவரணப் பிரதி எழுதப்படுகின்றது. அவசர அவசரமாக பிரதிக்கு ஏற்ப படங்கள் தொகுக்கப்படுகின்றன. அன்று மாலை வேளையில் நானே குரல் கொடுத்து அந்த விவரணம் முழுமை பெறுகிறது.  தமிழ் செய்தி ஒளிபரப்பை தொடர்ந்து இந்த நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் அஷ்ரபின் ஆளுமை அடங்கிய நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி  இன்றும் பேசப்படும் ஒரு விவரணமாக  பார்க்கப்படுகின்றது. இன்றைய இளைய சமுதாயத்தினர் அன்றைய அஷ்ரபின் ஆளுமைகளை பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை அந்த விவரணம் பெற்றுக் கொடுக்கிறது. அது மட்டுமல்ல அந்த மனிதரின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களுடன் ஆரம்பம் முதலே தொடர்பு கொண்டிருந்தவன்  என்ற வகையில் அவரது இறுதி நாள் நிகழ்வு ஜனாஸா நல்லடக்கம் அனைத்தையும் நேரடியாக வழிநடத்தி ஒளிபரப்புச் செய்வதிலும் அவரது வாழ்க்கைப் பயணத்தை செய்திப் படமாக இந்த உலகிற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு விஷுவல் தொடர்பாடலாக இந்த நிகழ்ச்சியை தயாரித்ததிலும் எனது பங்களிப்பு மன நிறைவை தருகிறது.

 அதுமட்டுமின்றி  இந்த நிகழ்ச்சியின் வீடியோ  பிரதிகளை அன்றே அமைச்சர்களாக இருந்த சகோதரர் ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரப் ஆகியோருக்கும் கூட்டுத்தாபன நிர்வாகத்தின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்க முடிந்தது.  அந்த வைப்பகப்  படங்களே இப்பொழுதும்  அரசியல் கட்சிகளினாலும் தனிப்பட்ட நபர்களினாலும் அவரது நினைவு நிகழ்வுகளிலும்  பொது வைபவங்களிலும் கடந்த 23 வருடங்களாக அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

 - உமர்லெப்பை யாக்கூப் -
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK