விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

காலம் காலடியில் கொட்டியுள்ள சந்தர்ப்பத்தை கையாள்வது எப்படி?

 


சுஐப் எம்.காசிம்-

வாய்ப்புக்களை எதிர்பார்த்து காய் நகர்த்தும் அரசியலால், நாட்டு நிலைமைகள் நாளாந்தம் விறுவிறுப்பாகி வருகிறது. சரிந்துபோன பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வாய்ப்புத் தருமாறு அரசாங்கம் கோருகிறது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி வாக்குரிமைகளுக்கு வாய்ப்பளிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றன. நமதுநாட்டின் இன்றைய கள நிலவரங்களே இவை. இதனால், வாக்குகளா முக்கியம்? அல்லது வயிற்றுப் பசியா பிரதானம்? என்ற கோணங்களிலும்கோலங்களிலும் விமர்சனங்கள் எழுகின்றன. வயிற்றுப் பசிப் பிரச்சினைதேர்தலில் நல்ல பயன்களைத் தருமென எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதாவது, இந்தப் பொருளாதாரப் பிரச்சினை தீர்வதற்குள் இவர்களுக்கு தேர்தல் தேவை. அரசாங்கமோ பசியைப் போக்கும் வழிகளைத் தேடியவாறு பலப்படுவதற்கு கால அவகாசத்தை எதிர்பார்க்கிறது. சம பலத்திலும்  சம பார்வையிலும் உள்ள இந்தப் பிரச்சினைகளே அரசியல் களத்தை உரசிப்பார்க்கின்றன.

 

இதன் தாற்பர்யங்களைப் புரிந்துள்ள அரசாங்கம், அவசர அவசரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமூடாக அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறது. வெளிநாடுகளுக்கு இந்த எதிர்க்கட்சிகள் பூசவுள்ள சாயங்களைத் திசை திருப்ப வேண்டுமானால்நாட்டின் நீ்ண்டகால தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணவே வேண்டும். உண்மையில் நல்லதொரு சந்தர்ப்பம் இது.

 

தனக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து தப்பிக்க ஜனாதிபதியும், அரசாங்கமும் இதைச் செய்தே ஆக வேண்டுமென்ற நிலையிருக்கிறது. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியும் அதன் சகபாடிகளும் அரசாங்கத்தின் நெருக்கடியை பயன்படுத்துவதுதான் அரசியல் தர்மம். தமிழர்களுக்காகவே குரல் கொடுக்கவும் போராடவும் வந்துள்ளதாகக் கூறும் தமிழ் தேசிய தலைமைகளின் காலடியில் கடவுளே கொண்டு வந்து கொட்டியுள்ள சந்தர்ப்பம்தான் இது. அரசாங்கங்களை எதிர்ப்பது என்ற மரபு வழியிலிருந்து மாறி, வரப்போகும் தீர்வுத் திட்டத்துக்கான மூன்றிலிரண்டு பலத்தைப் பெறுவதற்கு தமிழ் தலைமைகள் ஆதரவளித்துப் பார்க்கட்டும்.

 

தற்போதைய ஜனாதிபதி, இவரது தயவிலுள்ள அரசாங்கம் என்பவற்றின் கடந்த கால வரலாறுகள்தான், தீர்வுத் தி்ட்டத்தை தட்டில் வைத்து திணிக்கும் சூழ்நிலையை இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஞாபகங்களை வெளிநாடுகளில் நினைவூட்டுவதால் வரப்போவது ஒன்றுமில்லை. எனவே, நமது வயிற்றுப் பசித் தீர்வுகளுக்கான பாதைகளை மூடுவதை விடவரலாற்றுப் பாதையில் விரவிக் கிடக்கும் வடுக்களைப் போக்கஜனாதிபதியின் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைத்தே தீரவேண்டும். மட்டுமல்ல, ஐக்கிய மக்கள் சக்தியையும் இதற்காக அழுத்த வேண்டியும் இருக்கிறது.

 

சகல அரசியல் கட்சிகளும் பேதங்களின்றிப் பயணிப்பதற்கான புதிய சூழலை காலி முகத்திடல் கலவரங்கள் ஏற்படுத்திய பின்னருமா “இது எமது ஆட்சி”நாங்கள் எதிர்க்கட்சி” என்ற வாதப்பிரதிவாதங்கள். எனவே, மக்கள் ஆணை தேவை, சர்வஜன வாக்கெடுப்புத் தேவையென்கின்ற நிலைமைகள் ஏற்படாமல், சகல பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுஒத்துழைத்து உழைத்தால் நாட்டின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும். இந்தத் தீர்வுகள் வந்தால், சர்வதேசத்துக்கும் நமது நாட்டில் நம்பிக்கை பிறந்துவிடும். இது பிறந்தால், நமது பொருளாதாரப் பிரச்சினைக்கு வழியும் திறந்துவிடும்.

 

இப்போதுள்ள நமது தலைவர்களில்  (சிங்களம், தமிழ், முஸ்லிம்) வாழ்க்கையின் ஓய்வு நிலைக்குச் செல்லும் வயதுக்கு வந்தவர்களே அதிகம். எனவே, இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை அன்பளித்துச் செல்லும் ஒரு கைங்கர்யத்தைச் செய்வது இவர்களின் கடமையாகியுள்ளது. கட்சி, இனம், மதம் மற்றும் மொழியென்ற பாகுபாடுகளில்லாத சிந்தனைகளுக்குள் நமது செல்வங்களை இழுத்துச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள். இந்தப் பாகுபாடுகளால் மோதிமுரண்பட்டு நாம் அனுபவித்த வேதனைகளையா நாம் வாரிசாக விட்டுச்செல்லப் போகிறோம்?

 

எனவே, இன்றுள்ள சந்தர்ப்பத்தை இதய சுத்தியாகப் பயன்படுத்த அரசியல் தலைமைகள் முன்வரட்டும். எல்லாத் தரப்பினரையும் விரல்நீட்டி குற்றம் சுமத்த மக்களைத் தயார்படுத்தாதீர்கள். வந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோர் யார்? வரும் சந்தர்ப்பத்துக்காக காத்திருப்போர் யார்? எந்தச் சந்தர்ப்பங்களும் வரக்கூடாதென உழைப்பவர்கள் யார்? இவற்றையெல்லாம்கடந்த கால வரலாறுகள் மக்களுக்குப் படிப்பினையூட்டியுள்ளன.

 

எனவே, பாகுபாடுகள் மற்றும் வேறுபாடுகளால் கோணங்கள், கோலங்களாகச் சிந்தித்து, கோடியின் மூலைக்குள் குந்தியிருக்காதீர்கள். நாட்டுக்குப் பல கோடிகள் வருகின்ற கோணங்களிலும் மற்றும் கோலங்களிலும் சிந்தித்து, பல கோடி ரூபாவை ஈட்டவும் அந்நியச் செலாவணியாக உழைக்கவும் வழிகளை ஏற்படுத்த ஒன்றுபடுங்கள்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK