-சுஐப் எம்.காசிம்-

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற சலசலப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு, சக்தி ஊட்டுவதாக அமையப்போகிறதா? என்ற எதிர்பார்ப்புக்கள் துளிர்விடும் காலமிது. ஜனநாயகப் பண்புகள் மலினமாகி, சட்டத்தின் ஆட்சி சங்கடத்துக்குள்ளாகும் சூழ்நிலைகள்தான் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை அதிகரிக்கிறதா?  என ஆராயவும் வேண்டியுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் கைது, ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் கைதாவதற்கான சூழல், ஏற்கனவே எம்.பிப் பதவியையும் இழந்துள்ள ரஞ்சன் ராமநாயகா,இவ் விவகாரங்களைத் தோளில் சுமந்து கூவித் திரியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு துறைமுக நகரும்,தென்னிலங்கையில் விற்பனையாகக் கூடிய நல்ல சரக்குத்தான். ஆனாலும் தென்னிலங்கைச் சந்தையில் இன்னும் சனங்கள் திரண்டதாகத் தெரியவில்லையே!

நாட்டின் இரண்டு பெரிய பாரம்பரியக் கட்சிகளையே, படுக்கையில் போடவைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு சக்தியா? சவாலா.? களப் போராட்டத்தில் நாம் காணப்போவது இதைத்தான். ஆனால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த சம்பவத்தின் பின்னணிகள், அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் பாரதூரமானதுதான். தேடிச் சென்றாலும் சந்திக்க முடியாத, இந்த நாடுகளின் தூதுவர்கள், ஆணையாளர்கள் நாடிச் சென்று சந்தித்தது எதற்காக? அப்படியென்ன அரசை ஆட்டிப் பார்க்கும் பொறுப்பையா இவர்கள் ஊதிவிட்டு வந்துள்ளனர். இல்லை, இது சம்பிரதாயச் சந்திப்பா? எதிர்க்கட்சித் தலைவர் தேடிச் சென்று சந்திப்பதும் அபிலாஷைகளை அள்ளி வைப்பதும்தானே சம்பிரதாயம். எனவே, இந்த அரசின் போக்குகள் இந்த நாடுகளுக்குப் பிடிக்கவில்லை என்ற செய்தியும் இந்தச் சந்திப்பில் சொல்லப்பட்டிருக்கும், சொன்ன செய்திகளில் கொழும்பு துறைமுக நகரம் மாத்திரமே, இந்நாடுகளின் நலன் சார்ந்தவை. ஏனையன உள்நாட்டு விவகாரங்கள். உண்மையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளதும் இருப்புக்கள் நிலைகுலைந்த பின்னர், மேலைத்தேய நலன்சார் அரசாங்கம் இலங்கையில் இல்லாதொழிந்துள்ளது. இவ்வாறான ஒரு அரசின் தேவை, இந்நாடுகளுக்கு அவசரமில்லைதான். ஆபத்து ஏற்படலாமென்ற அச்சத்தால், தற்போதுள்ள அரசை எச்சரிக்க வேண்டுமே! அதற்காகத்தான் இந்தச் சந்திப்பு. 

உள் நாட்டுச் சரக்குகளைக் கூவி விற்பதால், தென்னிலங்கைச் சந்தையைக் களைகட்டச் செய்ய முடியாது என்பதையும் இந்நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. இதனால் வெளிநாட்டுப் பண்டம் (துறைமுக நகரம்) ராஜபக்ஷக்களின் கிராமியச் சந்தைகளுக்கு வரப்போகின்றதோ தெரியாது?

மிக நீண்ட நாள் நண்பனான ரணில் விக்ரமசிங்கவை நம்பிப் பயனில்லை என்பதால், மேலைத்தேயத்தின் இலங்கை நலன்கள் எல்லாம் இனி, சஜித் பிரேமதாஸவின் தலையில் சுமத்தப்படவுள்ளது. இலங்கையர் இப்படித்தான், இச்சந்திப்பை நம்புகின்றனர். பறித்துப் பரிசாகக் கொடுத்த ஆட்சியையே, பத்திரப்படுத்த தெரியாத ரணில், தனித்து ஒருவராகப் பாராளுமன்றம் வந்து, எதைப் பிடுங்குவாரென்று எவருக்கும் தெரியாததா? இருந்தாலும் இச்சந்திப்பில் சஜித்துக்கு சங்கடங்களும் இருக்கவே செய்கின்றன.

புலிகளின் சிந்தனைச் செல்வாக்கிலுள்ளோர் புகழுடன் வாழும் நாடுகளின் தூதுவர்கள்தானே சந்தித்தது. சந்திப்புக்கான சன்மானம் நாட்டில் பாதியா? என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியான சாட்சிகளை முன்வைத்தால், தென்னிலங்கையில் விற்பனையாகாதே! இலங்கையரின் நம்பிக்கையை இதில்தான், சஜித் வெல்ல வேண்டியுள்ளது. மேலும் தொழிலாளர் தினம், சஜித்தின் தந்தையாரை நினைவூட்டும் அரசியல் நிர்ப்பந்தத்தை சகலருக்கும் ஏற்படுத்தியும் இருக்கிறதே! தேவையேற்படும்பொழுது  ராஜபக்ஷக்களும் இதை, நினைவூட்டத் தவறுவதும் இல்லை. "பிரேமதாஸவை நேசிப்போர், ராஜபக்ஷக்களை ஆதரிக்க வேண்டுமென" 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோள்தான் இவர்களை நிலைப்படுத்தியது. 

இதனால்,ஐக்கிய தேசியக் கட்சி இருபது இலட்சம் வாக்குகளால் தோற்றதும் நாட்டு மக்களின் நினைவுகளிலுள்ளன. எனவேதான், இச்சந்திப்புக்கள் இப்போது வரைக்கும் அரசுக்குத்தான் ஆணிவேராகலாம். சீனாவின் தலையீடுகளெல்லாம் நகர்ப்புற வாக்காளர்களின் வாழ்க்கையில், தொடர்புறுமளவுக்கு, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதும் இல்லை. இந்த நாடிபிடித்தறியும் நாட்டமிருக்கிறதே, இது ஏனைய கட்சியினருக்கு ஏறாமோட்டைதான். 

சீனப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தில் பாதுகாப்பு, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கு பிரதானமளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், பாதுகாப்பும் மருத்துவமும்தான் இன்று மக்களுக்கு, குறிப்பாக கிராம மக்களுக்குப் பிரதானமானது. சாதாரண கிராமியப் பொருளாதாரம் மற்றும் வீட்டுப் பொருளாதாரத்துடன் வாழும் மக்கள் சீனாவின் யுவான், பணச்சலவை மற்றும் கறுப்புப் பணம் பற்றிக் கணக்கே தெரியாதவர்களாயிட்டே.  

இருந்தாலும், அந்நியச் செலாவணி வீழ்ச்சி எல்லோருக்கும் பாதிப்புத்தான். இது, இப்போதைக்கு இல்லையே. இதையே அரசாங்கமும் சிந்திக்கிறது. ரஷ்யாவின் "ஸ்புட்னிக்" மருந்துகளை இம்மாதம் (04) இலங்கை கொள்வனவு செய்கிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சரும் வந்து சென்றுவிட்டார். இவை எல்லாம் அமெரிக்க எதிர்ப்பு மனோநிலைகளாகப் பார்க்கப்பட்டாலும் அரசாங்கம் அசைந்தபாடில்லை. எனினும், முதலாளித்துவ மற்றும் கொமியுனிஸப் போட்டிகளுக்கு இப்போதுள்ள ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சென்றுவிடுமா? என்ற சந்தேகத்தையே, இவை மக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன.