உங்களது பூர்வீகம் குறித்தும் கல்லூரி வாழ்க்கை பற்றியும் கூறுங்கள். 

நான் ஊவா மாகாணத்தின் பதுளை நகரத்தில் பிறந்தேன். தற்போது எனக்கு இருபது வயதாகிறது. எனது ஊர் ஓர் அழகான இயற்கை வளம் கொண்ட பிரதேசமாகும். நான் ஆரம்பக் கல்வி முதல் படித்தது பதுளை ஒக்ஸ்பெர்ட் சர்வதேசப் பாடசாலையில். அது எனது பெற்றோரால் நடாத்தப்படும் ஒரு பாடசாலையாகும். நான் பிறந்தது முதலே அந்தப் பாடசாலைச் சூழலில்

வளர்ந்ததால் எனக்கு பாடசாலை என்பது இன்னொரு வீடாகவே அமைந்திருந்தது.

சில காலம் கொழும்பில் lead the way girls’ Intetnational இலும் கல்வி கற்றேன். தற்போது NIBM ( Coventry, UK ) நிறுவனதில் உளவியல் மற்றும் உளவளத்துணைத் துறையில் என் இளமாணிக் ( Bsc- Hons) கற்கையின் இறுதி வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள். 

எனது தாய் மற்றும் தந்தை இருவரும் பதுளை ஒக்ஸ்பெர்ட் சர்வதேசப் பாடசாலையின் பணிப்பாளர்கள். எனது பெற்றோர் தான் எனது முதல் ஆசிரியர்கள். எனது பாடசாலை எனது இன்னொரு வீடு என்று கூறினேன். அது போல் எனது  வீடு தான் எனது முதல் பாடசாலை.

எனது குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்குக் கீழ் நான்கு தங்கைகளும் ஒரு குட்டித் தம்பியும் இருக்கிறார்கள். எனது வாழ்வின் எனக்கு கிடைத்த முதல் முக்கியமான வரமாக, அருளாக எனது குடும்பம் உள்ளது. எனது தாய் மிகவும் திறமையானவர்;அத்தோடு உறுதியானவர்.

உங்களது தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் தொழில் செய்வதில்லை. இன்னும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நான் படிக்கும் போது இப்போது படிப்போம் பின் வேலை செய்வோம் என்று இருக்கும் ஆள் இல்லை. நான் படிப்போடு மட்டும் இருக்காமல் என் துறைசார்ந்த அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்காகப் பல சந்தர்ப்பங்களைத் தேடினேன். துறைசார்ந்த மேம்பாட்டிற்காக வாய்ப்புகளைத் தேடிப் பல நேர்முகப் பரீட்சைகளுக்கும் சென்றேன். அதன் மூலம் இரண்டு பொறுமதியான  வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.

ஊதியம் எதுவும் கிடைக்காவிட்டாலும் அவற்றின் மூலம் பெறும் அனுபவம் அளப்பறியது.

Lady Ridgeway Hospital  இல் psychology & counselling  internship ஐ நிறைவு செய்தேன். அதனைத் தொடர்ந்து அங்கு மேலதிகமாக அனுபவங்களைத் தொடரவும் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகளில் Research Data Analyst ஆகப் பணியாற்றவும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. தொழில்வாண்மையான, கள ரீதியான அனுபவங்களைப் பெற இவற்றை நல்ல  சந்தர்ப்பமாகக் கருதி செயற்படுகின்றேன்.

எழுத்துத் துறைக்கு உங்களை வரத் தூண்டிய விஷேடக் காரணிகள் ஏதும் உள்ளனவா?

நான் சிறுவயது முதல் வளர்ந்த பாடசாலைச் சூழலும் ஒரு காரணம். அக்காலத்தில் நான் தாயுடன் பாடசாலையில் இருக்க நேர்ந்தது. கல்வி , வாசிப்புச் சூழல் என் வளர்ச்சியில் அதிகம் தாக்கம் செலுத்தின. என் வீட்டில் நூலகம் ஒன்றுள்ளது. அதில் எனது தந்தை வாங்கிச் சேர்த்த பல்துறைசார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. எங்களது விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கு அமையவும் பல நூல்களை தந்தை வாங்கித் தருவார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த சுய முன்னேற்ற நூல்கள் ( self help ) ஏராளம் உள்ளன. சிறு வயது முதல் என்னிடம் இருந்த வாசிப்புப் பழக்கமே என்னை எழுதத் தூண்டியது எனலாம். அத்துடன் எனது தந்தை எங்களை நேசிப்பது போல் புத்தகங்களையும் நேசிக்கக் கூடியவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட பலர் கூறுகின்ற பின்னூட்டங்களும் என்னை அதிகம் உற்சாகப்படுத்தின. 

எப்போது, எந்த வயதிலிருந்து எழுத்துத்  துறையில் ஈடுபட ஆரம்பித்தீர்கள்? 

எனது முதல் கவிதை ‘Life’ எனும்  தலைப்பில் 2010  ஆம் ஆண்டில் (எனது 10 ஆவது வயதில்)  ‘funday times’ பத்திரிகையில் வெளியானது. அதை எனது பாட்டி ( உம்மம்மா)  பத்திரமாக எடுத்து வைத்து, சமீபத்தில் என்னிடம் காட்டினார். அதைப் பார்க்கும் போது எத்தனை கவிதைகள் அதன்பின் என்னால் எழுப்பட்டாலும் நான் பாராட்டப்பட்டாலும் அந்த மகிழ்ச்சி வித்தியாசமாகவே உள்ளது. 

2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தேன். பல கவிதைகள் முகநூலிலும் வேறு ஊடகங்களிலும் எழுதினேன். முகநூல் எனது எழுத்துத் துறைக்கு சிறந்த களத்தை, தளத்தை ஏற்படுத்தித் தந்தது. சுய முன்னேற்றம் சார் நூல்களை அதிகம் வாசிக்கப் பழக்கப்பட்டதால் என்னவோ எனது கவிதைகளின் மையக் கருத்துக்களும் அது சார்பாகவே அநேகமாக  இருக்கின்றன.  

நீங்கள் வெளியிட்ட புத்தகம் பற்றிச் சொல்லுங்கள்? 

எனது 18 ஆவது வயதிற்குள்  ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்ற வேட்கை என்னில் துளிர் விட்டிருந்தது. ஆனால் அதற்கு எடுத்த முயற்சி போதாமல் இருந்தது. நான் சமூக வலைத்தளங்களுக்கு எழுதிய கவிதைகளையும் ஆக்கங்களையும் பார்த்த பலர், காத்திரமான பின்னூட்டங்களை வழங்கி, என்னை உற்சாப்படுத்தினார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக என் திறமைகளைக் கண்டு,  புத்தகம்  வெளியிடும் என் கனவை நிஜப்படுத்த எனது அருமைத் தந்தை என்னை ஊக்கபடுத்தினார். எனது தந்தையின் வழிகாட்டலும் ஊக்குவிப்பும் தான் எனது ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய காரணங்கள். அத்தோடு தாயின் பங்களிப்பும் என்னை மேலும் பலப்படுத்தியது.

‘Inner wings’ எனும் ஆங்கில மொழி மூலமான எனது முதல் புத்தகக் கவிதைகளை எழுத எனக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்றன. இதில் அனைத்தும் ஊக்குவிப்பு கவிதைகளாகவே உள்ளன. ஒரு மனிதன் வாழ்வில் விழும் போது எழுந்து நிற்க மட்டுமன்றி உயரப் பறக்க அவனுக்குள்ளே  உள்ள சிறகுகளை விரிக்கச் செய்ய உந்துதல் வழங்கும் முகமாகவே இக் கவிதைகளை நான் எழுதினேன். நான் வாழ்வில் கண்ட அனுபவங்கள், உணர்ந்த விடயங்கள் மற்றும் சவால்களை இதற்கு கருவாக எடுத்துக் கொண்டேன். கவிதை எனும் போதே அதன் மொழி நடை நிறையப் பேருக்கு புரியாது. எளிய நடையில் எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் ஒரு கவிதைத் தொகுதி எழுதுவது எனது முதல் நோக்கமாக இருந்தது. 

புத்தகத்திற்கான பல கவிதைகளை எழுதியிருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் பதப்படுத்தி, மெருகூற்றினேன். எனக்கு பல்வேறு வகையிலும் எனது ஆசிரியை திருமதி கலா அவர்களும் மலேசியாவில் வசிக்கும் எமது மாமி ( தந்தையின் சகோதரி) திருமதி ரவ்ஷான் ஸெய்ன் அவர்களும் பெரிதும் உதவினார்கள். தட்டச்சு வேலைகளில் திருமதி முனவ்வரா அவர்கள் கைகொடுத்தார்கள். அத்தோடு கவிதைகளுக்கான பொருத்தமான ஓவியத்தையும் அட்டைப்படத்தையும் சிறப்பாக வடிவமைத்து தந்த ஆசிரியை ஷிபா பர்வீன் அவர்களது ஓத்துழைப்பு நன்றிக்குரியது. 

புத்தக வெளியீட்டு விழா பற்றிய ஞாபகங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா..? 

18 ஆவது வயது முடிவடையவிருந்த குறுகிய அந்திம காலத்திற்குள்ளேயே அனைத்தையும் நாம் செய்தோம். விழா ஏற்பாடுகள் கூட ஓரு கிழமைக்குள் செய்யப்பட்டன. இருப்பினும் ஏற்பாடுகள் சிறப்பாகவும் ஓழுங்காகவும் அமைந்தன. கொழும்பு சபாயா ஹோட்டலில் 16.07.2019 இல் வெளியீட்டு விழா நடந்தது. புத்தக வெளியீடுகளுக்கு மிகவும் குறைவாகவே மக்கள் வருகின்ற சூழ்நிலை இருந்த போதிலும் கூட 200 க்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து சிறப்பித்தார்கள். இதனை கெளரவமாக நினைக்கின்றேன். புத்தக வெளியீடு நடந்த ஒழுங்கை பலரும் பாராட்டிப் பேசினார்கள். பதுளையிலிருந்து வந்து தலைநகரத்தில் இப்படி ஒரு விழாவை சிறப்பாக செய்தது எமக்கு வியப்பைத் தந்ததாக பலரும் கூறினர். இதற்கு பின்னணியில் எனது தந்தையே மூலகர்த்தாவாக இருந்து செயற்பட்டார். 

எனது சகோதரிகள் மற்றும் எமது கல்லூரி நணபர்களாலேயே பல நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன. பிரபல அறிவிப்பாளர் பய்ஸல் பொன்ஸோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரதம அதிதியாக தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். நூல் ஆய்வை பிரபல சினிமா விமர்சகரும் எழுத்தாளருமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் நடாத்தினார்கள். இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக மொழிகள் பிரிவின் பீடாதிபதி மனோஜ் ஆரியரத்ன பிரதம பேச்சாளராவும் தற்போதைய முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ. பி. எம் அஷ்ரப், பன்னூலாசிரியர் அஷ்ஷெய்ஹ் ரவுப் ஸெய்ன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  விழாவை அலங்கரித்தார்கள். குடும்ப உறுப்பினர்கள், எனது நண்பிகள், எனது தந்தையின் நண்பர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், இலக்கியவாதிகள், ஊடகவாதிகள், நலன் விரும்பிகள் என்று பலரும் கலந்து கொண்டு விழாவை சிப்பித்தது மட்டுமல்ல என்னை உற்சாகப்படுத்தி வாழ்தினார்கள். 

கொழும்பில் நடந்த வெளியீட்டு விழா போன்று ஒன்றை எனது பிறந்த ஊரான பதுளையிலும் அதே மாதம் 31 ஆம் திகதி பதுளை ரிவ சைட் ஹோட்டலில் நடாத்தினோம். கொழும்பில் கிடைத்தது போன்ற அதே ஆதரவும் ஒத்துழைப்பும் ஊரிலும் கிடைத்தன. இதில் எனது முதலாவதும் இரண்டாவதும் தங்கைகளான நய்ஹா, நதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது விஷேட அம்சமாகும். அத்துடன் எமது கல்லூரி ஆசிரிய, ஆசிரியர்களால் ‘தங்க பிரேஸ்லட்’ ஒன்றை அணிவித்து என்னை கெளரவப்படுத்தியமையை சிறப்பு நிகழ்வாக குறிப்பிட விரும்புகிறேன். 

புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் அதற்கு கிடைத்த ஆதரவு பற்றியும் புத்தகம் கிடைக்கும் இடங்கள் குறித்தும் ஏதேனும் குறிப்பிட விரும்புகிறீர்களா..? 

இந்தியா, லண்டன், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், பொஸ்வானா, டுபாய் போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் எனது புத்தகத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்பு கொண்டு அதனை பெற்று வருகின்றனர். அத்தோடு குறிப்பாக கொழும்பிலுள்ள முன்னணி புத்தக நிலையங்களிலும் எனது புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சிலர் தனிப்பட்ட முறையிலும் அதனைப் பெறுகின்றனர். அத்தோடு கொழும்பிற்கு வெளியேயும் பல புத்தகசாலைகளிலும் எனது புத்தகம் கிடைக்கப் பெறுகின்றது. 

உங்களது புத்தகத்திற்கான வாசகர்களது பின்னூட்டங்கள் திருப்திகரமாக உள்ளதா...?  

உண்மையில் இளம் வயதிலுள்ள பல படைப்பாளிகள் என்னை முன்னுதாரணமாகக் கொண்டு, செயற்படத் தொடங்கியுள்ளனர்; எழுத ஆரம்பித்துமுள்ளனர். அவர்கள் தங்களது Role Model என்று என்னைக் குறிப்பிடுவது மகிழ்ச்சியை எனக்கு அளிக்கின்றது. அத்தோடு பல தாய்மார்கள் தங்களது சிறிய குழந்தைகளது படைப்புகளை எனக்கு அனுப்பி அவர்களும் எழுதத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு எனது புத்தகம் ஒரு காரணமானதாவும் குறிப்பிடுவது சந்தோஷத்தைத் தருகின்றது. பல இளம் சிறார்கள் எனது கவிதைகளை வாசித்து ஒளி, ஒலிப்பதிவு செய்து அனுப்பியும் உள்ளனர். கொழும்பில் Elocution Centre ஒன்று எனது புத்தகத்தை ஒரு பாடப் புத்தகமாகப் பாவிக்கின்றது. 

மனதளவில் வீழ்ந்த, இலக்கற்றிருந்த பலர் எனது புத்தக உள்ளடக்கத்தினூடாக நம்பிக்கை பெற்றதாகவும் விழிப்புணர்வு அடைந்ததாகவும் குறிப்பிடுவது எனக்கு ஓர் ஆத்ம திருப்தியைத் தருகின்றது. இவ்வாறு பார்க்கும் போது எனது புத்தகத்தை வெளியிட்டதன் நோக்கம் நிறைவேறுவது குறித்து அளவில்லா மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உங்களின் சேவைகளைப் பாராட்டி விருதுகள் கிடைத்துள்ளனவா? அது பற்றிக் குறிப்பிடுங்கள். 

NLP Practitioner Program எனும் ஒரு நிகழ்ச்சிக்கு இந்தியா சென்றிருந்தேன். எனது இலட்சியத்தையும் வேட்கையையும் புரிந்து கொண்ட பயிற்றுவிப்பாளர் அவர்கள், பயிற்சியின் முடிவில் ஒரு Appreciation note இல்  International Motivational Speaker எனும் வாசகத்தை எழுதி, பலர் முன்னிலையில் எனக்கு தந்து, அனைவரையும் கைதட்டப் பணித்து என்னை உற்சாகப்படுத்தினார்கள். அது எனக்கொரு நல்ல தூண்டுதலைத் தந்தது எனலாம். அல்ஹம்துலில்லாஹ். 

அத்தோடு பெங்களூரில் 2019 ஆம் ஆண்டு நடந்த International Conference On Life Skills Education இல் எனது புத்தகத்தை அறிமுப்படுத்திப் பேசவும் எனக்கு சர்வதேச மேடையொன்று கிடைத்தது. அங்கு எனது உரைக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தன. பல கலாநிதிகளும் வாழ்க்கைத் திறன் நிகழ்ச்சித் திட்டங்களை பயிற்றுவிக்கும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் நான் மிக இளம்வயதான ஆளாக இருந்த போதிலும் கூட என்னை மதித்து, உற்சாப்படுத்தி வாழ்த்தியமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை நடந்த அவர்களது சர்வதேச மாநாட்டில் நானே மிக இளம் வயதுடைய பேச்சாளராக கலந்து கொண்டிருக்கிறேன். அது மறக்க முடியாத சம்பவமாக உள்ளது. 

நான் ஏலவே குறிப்பிட்டது போல் புத்தகங்களுக்கு கிடைத்த நேர்மறையான பின்னூட்டங்களையே பெரிய விருதாகக் கருதுகிறேன். அதிலும் குறிப்பாக பல இளம் வாசகர்களது மனதை எனது புத்தகம் கவர்ந்துள்ளதை  ஒரு நல்ல விளைவின் சமிக்ஞையாகக் காணுகின்றேன். 

உங்களுக்கு வேறு துறைகளிலும் ஏதாவது ஈடுபாடு உண்டா..? 

2014 ஆம் ஆண்டில் எமது பாடசாலை மாணவர்களுக்கு சுய முன்னேற்றச் செயலமர்வை முதன் முதலாக செய்தேன். நான் 8 ஆம் ஆண்டில் அப்போது கற்றுக் கொண்டிருந்தேன். அது மிக்க மகிழ்ச்சியான தருணம். 2018 ஆம் ஆண்டில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவிகளுக்கு வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றை செய்தேன். கொழும்பிலுள்ள Modern Learning Studio நிறுவனத்தினால் ஏற்பாடு செய்த சிறுவர்களுக்கு இலகுவில் கற்கும் முறைகள் பற்றிய செயலமர்வோடு, வேறு சில தலைப்புகளிலும் சில நிகழ்ச்சிகளையும் நடாத்தினேன்.

கிழக்கு மாகாணத்தில் இரு பெண்கள் மத்ரஸாக்களிலும் சில அரசாங்கப் பாடசாலைகளிலும் மாணவ, மாணவிகளுக்கான கற்றல் மற்றும் ஆளுமை விருத்திற்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளேன். அத்தோடு கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் சில இணைய வழி செயலமர்வுகளையும் செய்துள்ளேன். குவைத் IPC நிறுவனத்தின் விஷேட அழைப்பில் வெளிநாட்டு வாழ் மாணவ மாணவிகளுக்கு ஒரு நிகழ்ச்சியையும் கடந்த வருடம் நடாத்தினேன். பாதிஹ் கல்வி நிறுவனம் O/ L எழுதிய மாணவிகளுக்கு நடாத்திய செயலமர்விலும் ஒரு வளவாளராக கலந்து கொண்டுமுள்ளேன். இவ்வாறு பணி தொடர்கிறது.

இந்தியா மற்றும் மலேசியாவில் நான் கற்றுக் கொண்ட பல விடயங்களைப் பகிர்ந்து கொள்ள இந் நிகழ்ச்சிகளின் மூலம் எனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு என்னை இற்றைப்படுத்திக் கொள்ள கொழும்பில் நடைபெறும் பல தலைப்புகளில் அமைந்த செயலமர்வுகளிலும் இணையவழி வகுப்புகளிலும் கலந்து கொள்வது எனது வழக்கம். கற்ற அறிவை, பெற்ற அனுபவத்தை என்னுடன் மட்டும் வைக்காமல் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து உதவும் மனப்பான்மையை எனது பெற்றோர் எங்களுக்கு ஊட்டியே வளர்த்துள்ளார்கள். 

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் இருக்கும். அவற்றில் முக்கியமானதைக் குறிப்பிட முடியுமா...? 

நான் தாய் வயிற்றில் இருந்த ஆரம்ப கட்டத்தில் என்னைச் சுமந்து கொண்டு கஃபாவை  ( மக்கா- உம்ரா பயணம்) வலம் வந்த வண்ணம் எனக்காக எனது பெற்றோர் பல பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவற்றின் அருள்களை நான் வாழ்வில் தொடர்ந்தும் காணுகின்றேன். உண்மையில் இன்று வரை நான் ஓர் அருள்பாலிக்கப்பட்ட குழந்தையாக ( blessed child ) என்னைக் கருத, கூறப்பட்ட இந்த நிகழ்வு முதல் காரணியாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

எனக்கு இந்த நிகழ்வு நினைவில் இல்லை. எனது பெற்றோர் கூறிய போதே நான் தெரிந்து கொண்டேன். எனது பெற்றோரின் பாடசாலை மாணவர்கள் ஒரு Elocution போட்டிக்குத் தயாராகிக் கொண்டு இருந்த சமயம் எனக்கு 2 1/2 வயதிருக்கும். அதன் பயிற்சிகளின் போது நானும் அங்கு இருந்ததால் கவிதையொன்றை எனக்கு பாடமாக்கிக் கொள்ள முடிந்தது. அதனால் குறித்த அந்தப் போட்டியின் விழாவில் எனக்கும் கவிதை கூறும் வாய்ப்புத் தரப்பட்டது. கவிதையை முழுக்க பாடம் செய்த போதிலும் மேடைக்குக் கீழுள்ள பார்வையாளர்களைக் கண்டதும் நான் ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்து விட்டேன். எனது தந்தை மேடையேறி வந்து,  எனக்குப் பின்னால்  முழந்தாழிட்டுக் கொண்டு, ஒவ்வொரு வரியாக எனக்கு ஞாபகப்படுத்த, நான் அதை முறையாக ஒவ்வொன்றாகக் கூறியுள்ளேன். அதனால் எனக்கு எந்தப் பரிசும் சான்றிதழும் கிடைக்கா விட்டாலும்  எனது தந்தையின் அந்தச் செயல் என் வாழ்க்கையில் முக்கியமானதாக நினைக்க வைத்தது. அன்று முதல் இன்று வரை எனது தந்தை ஒரு நல்ல தோழனாக எனக்கு பின்னாலிருந்து வழிகாட்டுகிறார்;நெறிப்படுத்துகிறார். அத்துடன் எனது தாயும் எனக்கு பல்வகையிலும் பக்கபலமாகவே உள்ளார்.கூறப்பட்ட இந்த ஆரம்பகால நிகழ்வுகள் மறக்க முடியாத ஞாபகங்களாக என்னில் பதிந்துள்ளன. 

இந்த நேர்காணலினூடாக விஷேடமாகக் கூற விரும்பும் செய்திகள் என்ன?

பெண் என்பவள் ஓர் ஆளுமை. அல்லாஹ் எல்லோரையும் ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்வோடு ஒரு சமூகப் பொறுப்பும் உள்ளது. பெண் என்பவள் குடும்பத்தைப் பராமரிப்பவளாக மட்டும் இல்லாமல் அவளது திறனை சமூகத்திற்கும் பயனுள்ள விதத்தில் பிரயோகித்து, சமூக மாற்றத்திலும் ஒரு பங்காளியாக அவள் மாற வேண்டும். அதற்காகப் பல்வேறு வகையிலும் எமது திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் முதலில் இருண்ட, மூடுண்ட போக்கிலிருந்து விடுபட வேண்டும். எம்மை கூர்மைப்படுத்திக் கொண்டு பல்துறையிலும் நாமும் முன்னேறுவதோடு பலருக்கும் கைகொடுக்க வேண்டும். மறுமையின் விளைநிலமே இவ்வுலகு. அதற்காக நாம் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய செயல்களில் தொடர்ந்தும் ஈடு படவேண்டும். அத்தோடு நாங்கள் மாறாத வரை  நினைக்கும் மாற்றம்  சமூகத்தில் வராது.  

இறுதியாக நீங்கள் வாசகர்களுக்கு ஏதாவது பகிர இருப்பின் குறிப்பிடலாம். 

உங்கள் முயற்சி மற்றும் நோக்கம் தூய்மையானதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். ஆகவே காரணங்கள் கூறி, பின்தங்கி விடாமல் பெற்றோர் தரும் சந்தர்ப்பங்களைப் பிழையாகப் பயன்படுத்தாமல் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக கட்டிளமைப் பருவத்திலுள்ள பலர் அநாவசியமாகக் காலங்களைக் கழித்து வீணடிக்கிறார்கள். அதை விடுத்து இலட்சிய வேட்கையோடு இக் காலத்தை எதிர்காலத்திற்குரிய மூலதனமாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காக அர்ப்பணத்தோடும் பொறுப்புணர்வோடும் வாழத் துணிய வேண்டும். இக்காலத்தைத் தவற விட்டால் எதிர்கால எமது இருப்புநிலை ஆட்டங்காணும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். 

நீங்கள் துணிந்தெழு நிகழ்ச்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள்.? 

இது வளர்ந்து வரும் பெண்களுக்கும் ஒரு சிறந்த களம் மட்டுமல்ல அரிய வாய்ப்புமாகும். இது இலைமறை காய்களாகவுள்ள ஆளுமைகளை வெளிக்கொண்டு வரவும் உதவுகிறது. ஏனைய பெண்களுக்கும் ஒரு மோட்டிவேஷன் ஆகவும் இருக்கிறது. திறமையான, அனுபவத்தில் மூத்த பெண் ஆளுமைகளும் இங்கு கலந்து சிறப்பிப்பதால் பல காத்திரமான அனுபவப் பகிர்வு நடைபெறுகிறது. சாதனைப் பெண்களுக்கு ஓர் அங்கீகாரமாகவும் இது அமைகிறது. பெண்களை துணிந்தெழச் செய்ய ஓர் உந்துதலை இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக வழங்குவது பாராட்டத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள எனக்கும் சந்தர்ப்பம் அளித்த sky tamil news மற்றும் துணிந்தெழு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சகோதரி Nuzaila Badurdeen மற்றும் சகோதரர் Basith அவர்களுக்கும் Tamil Radio-கத்தாருக்கும் எனது ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களது காத்திரமான சமூகப் பணி தொடரவும் அது பெண்களது எழுச்சிக்கு வித்திடவும் எனது வாழ்த்துகளைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
நன்றி  துணிந்தெழு 'வரலாறு படைக்க இருக்கும் வைர மங்கையர்" 

துணிந்தெழு குழுவோடு நடாத்திய நேரகாணல் இங்கு பகிரப்படுகிறது.