இலங்கையில் COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று (23) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஷிட் இந்த மனுவை சமர்ப்பித்து உரையாற்றினார்.

கனடாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள்  கையொப்பமிட்ட மனுவை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக இதன்போது சல்மா ஸாஷிட் குறிப்பிட்டார்.

COVID-19 தொற்றினால் மரணிக்கும் அனைவரின் உடல்களையும் கட்டாய தகனம் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு மனுவில் கையொப்பமிட்டவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை அரசின் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பாகவே அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் அடக்கம் செய்யும் மத, கலாசார நடைமுறைக்கு மதிப்பளிக்குமாறும் கட்டாயத் தகனத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என மனுவில் கையொப்பமிட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.