உலகில் உள்ள பலம் வாய்ந்த 500  முஸ்லிம் தலைவர்கள் பட்டியலில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் ரிஷ்வி முப்தி இடம்பிடித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் அவர் நடத்திய ஊடக மாநாட்டில் அவர் இந்த விடயத்தினை கூறினார்.

இலங்கையில் ஹலால் முறையை அறிமுகப்படுத்திமைக்காக 2010 இல் இந்த பட்டியலில் அவர் உள்ளடக்கப்பட்டதாக கூறிய ஞானசார தேரர் தொடர்ச்சியாக 11 வருடங்கள் இந்த பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத விவகாரங்கள் நிர்வாக பிரிவின் கீழ் இந்த பட்டியலுக்கு ரிஸ்வி முப்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ,அகில இலங்கை ஜமியதுல் உலமா  தலைவராக 7,500 அறிஞர்கள் 33 மூத்த அறிஞர்கள் அடங்கிய செயற்குழுவால் நாட்டின் 24 மாவட்டங்களில் அமைப்பின் 155 கிளைகளை பராமரித்தல்.

இஸ்லாமிய நீதித்துறை நிபுணராக ரிஸ்வி முப்தி இஸ்லாமிய காப்பீடு, வட்டி இல்லாத வங்கி (ஷரியா வங்கி) மற்றும் ஹலால் சான்றிதழ் ஆகியவற்றை இலங்கைக்கு கொண்டு வர உதவியது. 

மக்தாப் அடிப்படை இஸ்லாமிய கல்வி முறையை இலங்கைக்கு கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களுக்காக அவர் இந்த பட்டியலில் இடம்பிடித்து வருவதாக ஞானசார தேரர் கூறி உள்ளார்.

இவர்கள் கொண்டுவந்த ஹலால் புர்கா போன்ற விடயங்களால் தான் சிங்கள மக்களிடம் இருந்து முஸ்லிம்கள் தூரமாகியதாக அவர் கூறி உள்ளார்.

ஜமாதே இஸ்லாமி , தௌஹீத் ஜமாத் , இக்வான் முஸ்லிம் , தப்லீக் ஜமாத் போன்ற அமைப்பை சேர்ந்தவர்களின் கைகளிலேயே அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நிருவாகம் இருப்பதாக கூறிய ஞானசார தேரர் அடிப்படை வாதத்திற்கு வழி வகுக்கும்  அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தடை செய்யுமாறு பல தடவைகள் தாம் கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை வாத சிந்தனை உள்ளவர்களின் கைகளில் இருந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை மீட்டு ரிஸ்வி முப்தியை விரட்டி விட்டு சம்பிரதாய முஸ்லிம்களின் கைகளில் அந்த அமைப்பின் நிருவாகத்தை கையளிக்க வேண்டும் என கூறினார்.