முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அளவுக்கு மீறி கதைத்து வருகின்றார் என்றும், இதனுடைய விபரீதங்களை அவர் சந்சிக்க வேண்டி வரும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். நியுஸ் பெஸ்ற் வழங்கும் நியுஸ்லைன் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று நசீர் அஹமட் கூறியிருக்கின்றார்” என, நிகழ்ச்சியினை நடத்தும் ஊடகவியலாளர் ஹக்கீமிடம் தெரிவித்த போதே, அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பாக மு.கா. தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்; “நசீர் அஹமட் என்பவர் கட்சியல்ல. கட்சியுடைய தீர்மானம் பற்றி பேசுவதற்கு, அவருக்கு நாங்கள் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை.

அதே நேரம், சஜித் பிரேமதாஸவுடன்தான் நாங்கள் பயணிக்க வேண்டும் என்கிற நியதியும் கிடையாது. அவர் அளவுக்கு மீறி கதைத்து வருகிறார். இதனுடைய விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்.

கொஞ்சம் பக்குவம் போதாது என்று நினைக்கிறேன். இயன்றவரை அவர் தனது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்வவதன் மூலம், நன்மையடைவார் என்பதுதான் என்றுடைய நிலைப்பாடு” என்றார்.