பிரித்தானியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டமையை அடுத்து ஒன்றுக்கூடல் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எனினும் திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளுக்கு அனுமதிக்கோரி பொதுமக்கள் பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று சம்மேளனத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் திருமணம் மற்றும் மரண வீடுகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் எச்சரித்துள்ளார்.