ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடரில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலை தாரியின் தந்தையான அஹமட் லெப்பை அலாவுதீன் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபருக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன், சம்பவம் குறித்துத் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தமாகத் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு நீதவான் அலாவுதீனை எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.