விரக்தியின் விளிம்பிலுள்ள இளம் பெண்களை,வாழ வைக்க கரம் கொடுக்கிறோம். முஸ்லிம் இளம் பெண்கள் அமைப்பின் தலைவி. - பவாசா தாகா

 


முஸ்லிம் இளம் பெண்கள் அமைப்பு (YWMA) சுமார் 35 வருடமாக, பெண்கள் மத்தியில் சேவையாற்றி பெரும் பயனுள்ள குடும்ப மற்றும் சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டாலும், நாட்டின் பல பகுதிகளிலும் இந்த அமைப்பின் சேவைகள் விசாலமடைந்து

சகலரும் பயனடைந்து வருகின்றனர்.அது மாத்திரமன்றி சகோதர சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் இந்த அமைப்பின் உதவிகளைப் பெற்று வருவதாக, அமைப்பின் தற்போதைய தலைவி பவாசா தாஹா தெரிவித்தார்.

கேள்வி? இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பில்,உங்களது தொடர்பு மற்றும் பணிகளை சற்று விபரமாக விளக்க முடியுமா?

பதில்:- எனது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கு இந்த அமைப்புடன் இருந்த தொடர்பே,என்னையும் இதில் இணைய வைத்தது.சுமார் பத்து வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன். இடைவிடாத பணி, அர்ப்பணிப்பு, நம்பிக்கை போன்ற நல்ல குணங்கள்,என்னைத் தலைவர் மட்டத்துக்கு உயர்த்தியது.

கேள்வி? பொதுவாக பொதுப் பணி என்பது பெரும் சிரமமானது.அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு,ஒரு நிறுவனத்தின் தலைவராக, இப்பணியை எவ்வாறு முன்னெடுக்க முடிகிறது.

பதில்:- இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் யாப்பின் பிரகாரம்,ஒருவர் ஒரு தடவையே, தலைவராகப் பதவி வகிக்க முடியும்.தலைவர் ஒருவரின் பதவிக்காலம் மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான்,இரண்டு முறை தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டேன்.இதனால்,ஆறு வருடங்களுக்கு,இந்த அமைப்பை வழிநடாத்தவுள்ளேன். எந்தப்பொதுப் பணியும் விமர்சனத்துக்கு உட்படாமலில்லை. இந்த வகையில்,சில விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுகிறதுதான். அதற்காகப் பணியை விட்டு ஓட முடியாதே!எனினும்,சமூகப் பணிகளை நேர்மையாகச் செய்வதால்,ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவு விமர்சனங்களையே எமது நிறுவனம் எதிர்கொள்கிறது.


கேள்வி? இளம் பெண்களுக்கு,உங்கள் அமைப்பு எவ்வாறான உதவிகளைச் செய்கிறது. எவ்வகையான இளம் பெண்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றனர்.?

பதில்:- வருமானம் குறைந்த குடும்பத்தின் இளம் பெண்கள்,இளம் விதவைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், தொழில் வாய்ப்பில்லாதுள்ள பெண்கள்,குடும்பத் தகராறுகளால் வாழ்க்கையை விவாகரத்துச் செய்யவுள்ள பெண்கள் ஆகியோருக்கே,எமது நிறுவனம் பிரதான சேவையாற்றுகிறது. தையற் கலை, சிறுவியாபாரம்,மட்பாண்ட உற்பத்தி, அலங்காரப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சுய வருமானங்களுக்கான தொழிலீட்டல்களில் இப்பெண்களுக்கு அக்கறை,ஆர்வம் ஊட்டப்படுகிறது. விவாகரத்து நிலைக்கே சென்றுள்ள இளம் பெண்களின் கணவன்மார்களைச் சந்தித்து, பிணக்குகளைத் தீர்த்து வைக்கவும் நாம் பணியாற்றி வருகிறோம். மேலும் கிணறுகளை நிர்மாணித்துக் கொடுப்பதில் எமது அமைப்பு மிகப்பெரும் பங்காற்றி உள்ளது.நீருக்கான கட்டணங்களைச் செலுத்துவதில் இவ்விளம் பெண்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு இதனால்,ஓரளவு முடிகிறது.சுமார் ஐநூறு கிணறுகளை நாம் நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம்.

கேள்வி? உங்கள் அமைப்பின் நிதியுதவிகளை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள்?

பதில்:- எங்கள் அமைப்பில் சுமார் ஐம்பது பேர் உள்ளனர்.இவர்களூடாகப் பெறப்படும் சந்தாப் பணங்கள் மற்றும் தனவந்தர்களின் உதவியைக் கொண்டுதான்,தொண்டாற்றி வருகிறோம்.குறிப்பாக பாரபட்சம், பக்கச்சார்பின்றி நியாயமாகப் பணியாற்றுவதால்,பலரது நம்பிக்கையை, எமது அமைப்பு பெற்றுள்ளது.இதனால் பல வழிகளிலும் இறைவனின் உதவியால்,எமக்கு நிதியுதவி கிடைக்கிறது.குறிப்பாக இந்தப் பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு எனது கணவர் உட்பட குடும்பத்தினர்,அங்கத்தினர் வழங்கும் ஆதரவு,ஒத்துழைப்புக்கள்தான் இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல உதவுகிறது. 



கேள்வி:- கொரோனா காலத்தில்,இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததே!நிலைமைகளை எதிர் கொண்டு பணியாற்றுவது சிரமமாயிருக்கவில்லையா?

பதில்:- மிகக் கடினமான காலமாகத்தான் இது எங்களுக்கு இருக்கிறது. பெரும்பாலும் தொலைபேசியில்தொடர்பு கொண்டு, தேவைகளைத் தீர்த்து வைத்தோம்.தூர இடங்களுக்கு,சில உதவியாளர்களை அனுப்பி இளம்பெண்களின் காலடிக்கு சேவைகளைக் கொண்டு சென்றதில் பெரும் மகிழ்ச்சிதான்.

நேர்காணல் - றினொஸா

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK