ரிஷாட் பதியுதீன் கைது முயற்சி தனிநபர் பிரச்சினையா?


வை.எல்.எஸ்.ஹமீட்

இன்று 20வது திருத்தம் பல கோணங்களில் எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. ஒரு புறம் ஆளுங்கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள். இன்னொரு புறம் பிரதான மத பீடங்கள் அதனை எதிர்க்கின்றன. மறுபுறம் இந்த எதிர்ப்புகள் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அந்த சலசலப்புகளில் இருந்து பெரும்பான்மை சமூகத்தின் அவதானத்தைத் திசைதிருப்பும் ஓர் முயற்சியாக இந்த கைதுக்கான முஸ்தீபு இருக்கலாம்; என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் குறித்த சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. இந்த கைது முஸ்தீபு திடீரென இப்பொழுது ஏன்?

அவ்வாறாயின் ஒவ்வொரு முறையும் அரசுக்கெதிராக அதிருப்திகள் தோன்றும்போது அவற்றைத் திசைதிருப்ப முஸ்லிம் அரசியல் தலமைகளுக்கெதிராக அல்லது மொத்த சமூகத்திற்கதிராக ஏதாவது நிகழ்வுகள் இடம்பெறுமா? இதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டிய கேள்வி.

இச்சந்தர்ப்பத்தில் அரசியல் வேறுபாடுகளை வெளிக்கொணர்வது அறிவுடமை அல்ல. இன்று இவராக இருக்கலாம்; நாளை இன்னுமொரு கட்சித் தலைவராக இருக்கலாம்; அல்லது சமூகமாக இருக்கலாம்.

எனவே, எதிர்காலத்தை எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறோம்? இது தொடர்பாக பாராளுமன்றத்தை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம்? சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் எவ்வாறு செயற்படப்போகிறோம்?

எதிர்க்கட்சிகள் மற்றும் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் உள்ள நடுநிலையாளர்களை இணைத்துக்கொண்டு முஸ்லிம்கள் தொடர்பாக பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள சந்தேக மனோநிலையை எவ்வாறு களையப்போகின்றோம்? இவைகள்தான் நாம் தெளிவாக சிந்தித்து விடைகாணவேண்டிய விடயங்கள்.

குற்றம் செய்திருந்தால் சட்டநடவடிக்கை எடுப்பதை யாரும் குறைகூறமுடியாது. ஆனால் ஒரு வருடம் காத்திருந்து இவ்வாறான சூழ்நிலையில் செய்யப்படுவதேன்? எனவே, இந்த சூழ்நிலை தனியொருவருக்கெதிரான ஒன்றாகப் பார்க்கப்படுவது இச்சூழலில் பொருத்தமற்றது.

அதற்காக உணர்ச்சி வசப்படுவதிலும் அர்த்தமில்லை.

இந்த சூழ்நிலையில் அரசியல் தலைமைகள், சிவில் தலைமைகள், புத்திஜீவிகள், கட்சிவேறுபாடுகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், தற்போதைய பிரச்சினையை “ஒரு தனிநபர் பிரச்சினை” என்ற பார்வையைத்தவிர்த்து, அரசுடன் மக்கள் அதிருப்தி கொள்ளும்போதெல்லாம் முஸ்லிம்களின் ஏதாவதொரு தரப்பை துருப்புச் சீட்டாகப் பாவிக்கும் சூழ்நிலையை மாற்றுவதற்கு காத்திரமாக, அறிவுபூர்வமாக எவற்றைச் செய்யலாம்; என்பதைப்பற்றி கலந்துரையாடவேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post