கொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், தொடர்பு தடமறிதல் இடம்பெற்று வருகின்றது.

நான்காம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பம்பலப்பிட்டி நந்தன கார்டனில் உள்ள விடுதியில் வசிக்கும் குறித்த வர்த்தக நிலையத்தின் 22 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மேலும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அமைப்பின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள அனைத்து கடைகளும் தற்காலிகமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வர்த்தக நிலையத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருக்கு எவ்வாறு நோய் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை