நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செய்தியொன்றை பிரசுரித்ததாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இணைய ஊடகயவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாரினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரை 25 ஆயிரம் ரொக்க பிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் அடிப்படையிலும் விடுவித்த நீதவான் ஒவ்வொரு வாரத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும் அவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் பிணை ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என நீதவான் சந்தேகநபரை எச்சரித்துள்ளார்.

பின்னர் மனு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.