வௌிநாடுகளின் தலயீடுகளின்றிய புதிய அரசியலமைப்பே நாட்டுக்கு தேவை 19 ஐ முதலிலே எதிர்த்தது தேசிய காங்கிரஸ்


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென முதலாவதாகக் குரல் கொடுத்தது தேசிய காங்கிரஸ்தான் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கை யிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டின் சமகால அரசியல் நிலவரங்களில் தேசிய காங்கிரஸின் நிலைப்பாடுகளை தௌிவு படுத்தும் பொருட்டு இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.இங்கு மேலும் கருத்து தெரிவித்த தேசிய காங்கிரஸ் தலைவர்:


எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பேதங்களை மறந்து இலங்கை தேசிய காங்கிரஸ்,பாடு பட்டது.இவ்வாறு பேதமில்லாமல் செயற்படும் நோக்கில்தான் எமது கட்சிக்கு தேசிய காங்கிரஸ் என்று பெயர் சூட்டினோம். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியலையே தேசிய காங்கிரஸ் செய்து வருகிறது.புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு வகையான பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழித்தல்,இருபதை அமுல் படுத்தல்,புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருதல் போன்ற பல விடயங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்துவதாலே இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமுள்ள இந்த அரசாங்கத்திற்கு இவற்றை இலகுவாகச் செய்ய முடியும்.எனினும் வௌிநாடுகளின் தலையீடுகளின்றியே இவை செய்யப்பட வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இவற்றில் சில,வௌிநாடுகளின் அழுத்தங்களாலே செய்யப்பட்டன.இதனால்தான் இன்று பல பிரச்சினைகளும் எழுந்துள்ளன.நமக்கான தீர்வு, நமது நாட்டுக்கான எதிர்காலம்,எமது மக்களுக்குத் தேவைப்படும் ஐக்கியம், சமாதானம் என்பவற்றை வௌிநாடுகளால் தீர்மானிக்க முடியாது.இது பற்றி தேசிய காங்கிகரஸின் பாலமுனைப் பிரகடனம் தௌிவாகச் சொல்கிறது. இந்தியா, நோர்வே, ஐரோப்பா என்பன தமது தேவைகளுக்கு ஏற்பவே,எமக்குத் தீர்வுகளைத் திணித்தன. சின்னஞ் சிறிய எமது நாட்டை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்ததும் இவர்களின் தலையீடுகள்தான்.இதனால்தான் புதிய அரசியலமைப்பு வௌிநாடுகளின் தலையீடுகளின்றி வரையப்பட வேண்டும் என்கிறோம். நமது நாட்டிலுள்ள படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள், சமாதான விரும்பிகள், மதத் தலைவர்கள், சிங்கள, தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து புதிய அரசியல் யாப்பின் அம்சங்கள் பற்றிப் பேச வேண்டும். ராஜபக்‌ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதில் தேசிய காங்கிரஸ் ஒருபோதும் பின் நின்றதில்லை.முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவிடம் 2005 இல் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தோம்.அவற்றில் பயங்கரவாதத்தை ஒழித்தல்,கிழக்கு மாகாணத்தை பிரித்தல் ஆகிய இரண்டும் நிறைவேற்றப்பட்டுவிட்டன.சகலரும் ஒற்றுமையாக வாழும் புதிய அரசியலமைப்பை உருவாக்கல் என்ற எமது மூன்றாவது கோரிக்கையே எஞ்சியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதை,நிறைவேற்றி வைப்பார். இதில் வௌிநாடுகளின் தலையீடுகள் இருக்க கூடாது எமது விருப்பம்.19 ஆவது திருத்தத்தின்,குறைபாடுகள் நல்லாட்சி (இரு கட்சி) யிலே தெளிவாகத் தெரிந்தன. எடுத்ததெற்கெல்லாம் நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்பட்டு, நிர்வாகச் செயற்பாடுகள் தாமதமடைவதை இல்லாதொழிக்கவே, 52 நாள் அரசில்,ரணிலை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தோம்.இருபதாவது திருத்தத்தை எமது கட்சி ஆதரிக்கும்.19 ஒழிப்பதை மாத்திரமாகக் கொள்ளாது,மக்களுக்குத் தேவையானவை இருபதில் இருப்பது அவசியம்.அடிப்படைவாதிகளைக் கைது செய்வதற்கு தடையாக இருந்ததாக என்மீதும் முன்னாள் இராணுவ அதிகாரி குற்றம் சுமத்தி உள்ளார்.இது அப்பட்டமான ஒரு இட்டுக்கட்டல். அமைச்சர்களின் உத்தரவுக்கு இணங்கி பாதுகாப்பு காரணங்களைப் புறந்தள்ளிய, இந்த இராணுவ அதிகாரிக்கு உரிய நடவடிக்ககை எடுப்பதுதான் பொருத்தமானது எனக் கருதுகிறேன். பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் இருந்ததாலே எனக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு,குண்டு துளைக்காத வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தந்ததாகவும் அதாஉல்லா தெரிவித்தார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post