இனவாதமில்லாத அபிவிருத்தி முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பேன்

சட்டத்தரணி முஷர்ரப் முதுநபீன்
– பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  • உங்களைப் பற்றி
ஆரம்பக் கல்வியை பொத்துவில் அல் இபான் கல்லூரியில் ஆரம்பித்தேன். பின்னர் பொத்துவில் மத்திய கல்லூரியில் க.பொ.த சா.தரம் வரை படித்தேன். உயர் கல்வியை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் விஞ்ஞானத் துறையில் கற்று பல்கலைக்கழகம் தெரிவானேன். ஆனால், பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடரமுடியாமையால் ஊடகத்துறையில் இணைந்தேன். 15 வருட ஊடக வாழ்க்கைக் காலத்தின்போதே திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டம் பெற்று, சட்டத்தரணியானேன்.
2006 முதல் 2017 வரை ஊடகத்துறையில் கடமையாற்றினேன். நேத்ரா தொலைக்காட்சியிலேயே எனது ஊடகப் பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்தம் தொலைக்காட்சி மற்றும் யூடீவி என்பவற்றில் கடமையாற்றினேன். அங்கிருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக இணைந்தேன். அதாவது, அம்பாறை ஊடகவியலாளர்களுடன் இணைந்து வடமாகாண கள விஜயம் ஒன்று மேற்கொண்டோம். அதன்போதே நான் என்னை இக்கட்சியில் பூரணமாக இணைத்துக் கொண்டு இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். அதன் ஒரு கட்டமாகவே இப்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம்.
  • தற்போதைய முஸ்லிம் சமூக அரசியலை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
தற்போதைய முஸ்லிம் சமூக அரசியலை நாம் விரும்பியோ விரும்பாமலோ மிகவும் இக்கட்டான சிக்கலான கட்டத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம். இதற்கு யார் காரணம் மற்றும் இதில் யார் சரி, யார் பிழை என்ற வாதப் பிரதி வாதங்களுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் தொடர்பான சர்வதேசத்தின் பார்வையும் போக்கும் ஒரு பெரும் சதி நமக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இதனடிப்படையில் முஸ்லிம் சமூக அரசியல் என்ன தீர்மானத்தை எடுத்திருந்தாலும் இதே முடிவுதான் வந்திருக்கும் என்பதையும் விளங்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 52 நாள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்போது முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள் தற்போது ஆட்சி பீடமேறியுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்ற பார்வையும் இருக்கிறது. ஆனால், அது ஒரு முழுமையான கருத்தாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், பொது பல சேனா 2014 இல் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே அவர்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
இப்போது அதனை மிகவும் தெளிவாக விளங்கக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா போன்றவர்கள் ஒத்துழைப்பு வழங்கினாலும் அவர்களை முன்னிலைப் படுத்துவதைவிட தங்களது திட்டங்களை முன்னிலைப் படுத்துவதையே தற்போதைய அரசாங்கம் குறியாக இருக்கின்றது. இவைகளை வைத்து நோக்குகின்றபோது எதிர்காலம் மிகவும் இக்கட்டான சூழலாகவே இருக்கும் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, இக்கட்டான அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர்கின்றபோது புதிதாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள அரசியல்வாதி என்ற அடிப்படையில் நான் எவ்வாறான அரசியல் வகிபாகத்தை வகிக்க வேண்டும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். அதன் அடிப்படையில் சமூகத்திற்காக என்னாலான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வேன். அதேபோல் சமூகத்திற்கான எனது குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
அதேநேரம், இந்த அரசாங்கம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாதத்தைப் பயன்படுத்தியது. ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் இனவாதத்தை கைவிட்டு விட்டு எல்லா மக்களையும் ஒரேவிதமாக நோக்கி நாட்டு அபிவிருத்திக்காக செயற்பட்டால் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு இந்த அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருக்கிறோம். மாறாக, இனங்களுக்கிடையில் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி சமூகத்திற்கு எதிராக செயற்படுமாக இருந்தால் அதனை எதிர்ப்பதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
  • நீண்டகால ஊடக அனுபவத்தோடு தற்போதைய அரசியல் போக்கை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
சிறுபான்மை பெரும்பான்மை பற்றிய ஒரு புதிய பார்வை என்னிடம் உண்டு. அதாவது, இலங்கையில் வாழ்கின்ற மூவினத்திலுமுள்ள பெரும்பாலானவர்கள் நல்ல மனிதர்கள். ஆனால், எல்லா சமூகத்திலும் சிறுபான்மையாக வாழ்கின்ற தீய மனிதர்களின் ஆளுமைகளுக்குள் இந்த பெரும்பாலான மக்கள் தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்ற கவலை என்னிடம் உண்டு.
இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் எடுத்து நோக்கினால் அதனை அழகாகப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான பிரச்சினைகளை இந்த மூன்று இனங்களின் ஒற்றுமையின் மூலம் இலேசாக முடித்து வைக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த இன ஒற்றுமை, உடன்பாட்டை ஆரம்பிப்பதில் அரசியல்வாதிகள் தவறிழைத்து விட்டார்கள் என்பது எனது கருத்து.
தேர்தல் வெற்றிக்காக இனவாத அரசியலைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் தேர்தலுக்குப் பிறகும் அதனைத் தொடர்ந்தும் பயன்படுத்துகிறார்கள். இதனையே எல்லா சமூக அரசியல்வாதிகளும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, பொத்துவிலைப் பொறுத்தவரை ஹெடோயா திட்டம் என்பது ஒரு பெரும் திட்டம். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் பொத்துவில்லுக்கு மிகப் பெரிய வருமானம் வரும். அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் மொனராகலை சிங்கள மக்களோடு இணைந்தே அதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே, நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் இன விகிதாசாரப்படி இவ்வீடுகளை வழங்குமாறு தீர்ப்பு வழங்கியமையால் இவ்வீட்டுத்திட்டம் இன்னும் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதாலேயே இவ்வீட்டுத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.
இவ்வாறு இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளை களைந்து, அனைத்து இனங்களுக்குமிடையில் இணக்கப்பாடான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி சிறந்த, சுபீட்சமான இலங்கைத் தேசம் ஒன்றை கட்டி எழுப்புவதற்கு முயற்சிப்பதே எனது நோக்கம். இதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.
  • கிழக்கு மாகாணத்தில் விஷேடமாக அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் இனவாத செயற்பாடு, சீரான அபிவிருத்தி செயற்பாடு இன்மை மற்றும் காணிப் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகிறீர்கள், இவைகளுக்கு மத்தியில் உங்களது பயணத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள்?
நல்ல விடயம், உதாரணத்திற்கு ஒலுவில் துறைமுக விவகாரம் அங்குள்ள மக்களுக்கும் மீன்பிடியாளர்களுக்குமான பிரச்சினையாக மாறியுள்ளது. இங்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வாழ்கிறார்கள். இங்கு மாற்று சமூகத்தவர்கள் யாரும் இல்லை. இந்தப் பிரச்சினையைக்கூட எமது அரசியல் தலைமைகள் சிறந்த முறையில் அணுகி தீர்த்துவைக்க முயற்சிக்கவில்லை. அப்படியாயின் எமது சமூகத்திற்கும் மாற்று சமூகத்தவர்களுக்குமிடையிலான பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பது ?
மேலும், இங்கு ஒரு கட்சி மீனவ சமூகத்தை திருப்திப் படுத்துவதற்காக துறைமுகத்தை அபிவிருத்தி செய்கின்ற போர்வையில் மீனவர்களை தம்வசமாக்கிக் கொள்கிறார்கள். மாற்றுக் கட்சிக்காரர்கள் அங்குள்ள மக்களை கவர்வதற்காக வேண்டி “துறைமுக அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள்“ என்று மக்களை தூண்டி பிரச்சினைகளுக்கு தீர்வை நோக்கிச் செல்லாமல், ஒரே சமூகத்தவர்களையே இரண்டாகப் பிரித்து தங்களது அரசியல் இலாபத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறே, சாய்ந்தமருது கல்முனை விவகாரத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் அந்த மக்களை ஒற்றுமைப்படுத்திய அளவுக்கு சாய்ந்தமருது பள்ளியையும் கல்முனைப் பள்ளியையும் ஒற்றுமைப்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜம்இய்யதுல் உலமாவாலும் இந்த முஸ்லிம் சமூகத்தினாலும் முடியாமல் போயுள்ளது என்ற வேதனை எனக்கிருக்கின்றது.
அவ்வாறே, இத்தேர்தலில் அம்பாறையில் விதைக்கப்பட்ட இனவாதத்தால் தமிழ் சமூகம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கிறது என்ற ஆதங்கம் தமிழ் சமூக கல்வியலாளர்களுக்கு மத்தியில் முக்கிய பேசு பொருளாக இருக்கின்றது. அவ்வாறே முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு மத்தியில் இனவாதத்தை விதைக்கிறார்கள். அது சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்த்து, சுபீட்சமான சமூகத்தை கட்டி எழுப்பத் தடையாக அமையும். எனவே, இன நல்லுறவை வளர்த்து சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான என்னாலான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.
  • இதன் அடிப்படையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எவ்வாறு அமையும், இதில் முஸ்லிம்களின் வகிபாகத்தை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து பாரிய ஐயப்பாட்டோடு இருக்கிறேன். ஏனெனில், எல்லை நிர்ணயம் என்ற விவகாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் பழைய முறையான விகிதாசார தேர்தல் முறையிலேயே நடைபெறும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விகிதாசார தேர்தல் முறையிலேயே நடாத்த வேண்டும் என உறுதியாக இருந்தார்கள். அவ்வாறு நடாத்துவார்களாக இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படாது. எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படலாம்.
ஆனால், யாருக்கும் தெரியாமல் கொண்டு வரப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அம்பாறை மாவட்டத்திலும் நாட்டின் பல பாகங்களிலும் பல காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே யாருக்கும் தெரியாமல் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலால் நமது பிரதிநிதித்துவம் பல சிக்கல்களை சந்திக்கலாம். ஆனால், இப்போதைய அரசாங்கம் பழைய முறையிலேயே தேர்தலை நடாத்தும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவ்வாறில்லாமல் புதிய முறையில் செய்ய முயற்சிக்குமாக இருந்தால் நான் அதனை எதிர்ப்பேன்.
  • தற்போதைய அரசாங்கத்தின் போக்குகளை அடிப்படையாக வைத்து இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
தற்போதைய ஜனாதிபதியின் நிர்வாக திறமை, நேர்மையான செயற்பாட்டில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது. இதனை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது நான் ஊடகத்துறையில் இருந்து அழகாக அவதானித்துள்ளேன். அதேபோல், நான் எனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்போதும் அதனை சொல்லி இருந்தேன்.
அதாவது, பறவையின் கண்கொண்டு தலைநகரைப் பார்த்தவர் என்றால் அது தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷதான். அவ்வாறு கொழும்பை அழகு படுத்தினார். அதுமாத்திரமல்ல, ஊழலில்லாத, நேர்மையானவர்களை நிருவாகத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்டு செயற்பட்டார்.
அதன் அடிப்படையில், யுத்தம் முடிந்ததும் இராணுவத்தினரை அபிவிருத்தி செயற்பாட்டுக்கும், நிருவாகத்திற்கும் பயன்படுத்தினார். இதனை ஒரு நல்ல முறையாகவே பார்க்கிறேன். ஏனெனில், ஹிகோ சாவோஸ் முறை என்று கூறப்படுகின்ற இந்த நடைமுறை ஒரு சிறந்த வழிமுறையாகவே கூறப்படுகின்றது. ஆனால், இதில் பலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தது என்பதையும் நான் அறிவேன்.
இந்த மாற்றுக் கருத்துடையவர்கள் கடந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வேண்டி இராணுவத்தினரை ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்குப் பயன்படுத்தியதை மாற்றமாக பிரச்சாரம் செய்து நல்லாட்சி அரசாங்கம் கைப்பற்றியது. அதன் பின்னர் என்ன நடந்தது சுதந்திர சதுக்கம், ஆகேட் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் மீண்டும் அழுக்குகள் நிறைந்த இடங்களாக மாறின என்பதை நான் நேரில் கண்டு அவதானித்துள்ளேன்.
இவைகளை ஒப்பிடும் போது, தற்போதைய ஜனாதிபதி சிறந்த நிருவாகத்திறன் கொண்டவர், அவரின் நேர்மை மற்றும் நடுநிலமையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், இவரைச் சூழ ஒரு இனவாத கும்பல் காணப்படுவதால், அது சிறுபான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுமா என்ற அச்சம் இருக்கின்றது.
ஏனெனில், ஜனாஸாவின் உரிமையைக் கூட கொடுக்க விரும்பாமல் எரிப்பதிலேயே குறியாக இருந்து இப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்காத இவர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்துள்ள இவர்கள் எப்படி இந்த சமூகத்தைப் பாதுகாக்கப் போகிறார்கள்? அல்லது அந்த சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப் போகிறார்கள்? என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது. இது எவ்வாறு நிகழப் போகின்றது என்பதை அவர்களின் அடுத்த கட்ட நகர்வின் போதுதான் பார்க்கலாம்.
எனவே, நான் இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திடம் கோர விரும்புவது. இந்த நாடு சிங்கப்பூர், மலேசியா போன்று முன்னேற வேண்டும் என்று நினைத்தால், லிகுவான்யு, மஹாதிர் மஹ்மூத், நெல்சன் மண்டெலா போன்றவர்கள் எல்லோரும் இனரீதியான ஒருமைப்பாட்டை கொண்டுவந்துதான் நாட்டைக் கட்டி எழுப்பினார்கள். தேசப்பற்றை எல்லா இனத்தவர்களுக்கு மத்தியிலும் ஊட்டியதன் காரணமாகத்தான் தேசத்திற்காக எல்லோரும் ஒருமித்து உழைக்க பாடுபட்டார்கள்.
இவ்வாறான தேசப்பற்றை சமூகங்களுக்கிடையில் விதைக்கின்றபோதுதான் நாடு முன்னேற்றத்தை நோக்கி நகரும் என்று நான் நம்புகிறேன். இந்த தேசப்பற்றை விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்களிடம் இல்லாமல் செய்தோம். இதேநிலை இப்போது முஸ்லிம்களிடம் இல்லாமல் போகிறது. இதனை தடுத்து மூன்று இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்த்து தேசப்பற்றை உருவாக்கினால்தான் இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூகவியல் அபிவிருத்தி அடையும் என்று நான் நம்புகிறேன். அதனை பாராளுமன்ற பிரதிநிதிக்கு அப்பால் இந்நாட்டுப் பிரஜை என்ற அடிப்படையில் இந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திடம் இதனை ஒரு வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகிறேன்.
மேலும், முஸ்லிம் சமூகமும் விட்டுக் கொடுப்போடும், ஏனைய சமூகத்தை அரவணைத்தும் பல்லின சமூக ஒழுங்கில் வாழ்கின்றபோது எமது உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்கின்ற அதேநேரம் ஏனைய சமூகத்தின் நிலமையையும் முஸ்லிம் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இனவாதத்திற்கும் இனப்பற்றுக்கும் வித்தியாசம் உண்டு. இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி ஏனைய முஸ்லிம் செயற்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி யாரும் இனவாதம் பேசவில்லை அவர்கள் இனப்பற்றோடுதான் பேசினார்கள். எங்களது உரிமைகளைப் பாதுகாருங்கள் என்ற கோரிக்கையைத்தான் முன்வைத்தார்கள். ஆனால், பெரும்பான்மை சமூகத்தவர்கள் இனவாதத்தோடுதான் பேசினார்கள்.
சிறுபான்மையாக வாழ்கின்றவர்களுக்கு மத்தியில் எவ்வாறு இனவாதம் இருக்க முடியும் ? இனப்பற்றுதான் இருக்க முடியும். இதனை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் காணலாம். இதன் அடிப்படையில், முஸ்லிம் சமூகம் தங்களது சுயத்தை இழக்காத வகையில் சில விட்டுக் கொடுப்புக்களோடு வாழ்வதுதான் சாலச் சிறந்தது. அதற்காக புத்திசாதுர்யமாகவும், அறிவுடனும் செயற்பட வேண்டும். இல்லையாயின் நாம் பல அழிவுகளையும், இழப்புக்களையும் சந்திக்க வேண்டி ஏற்படும். எனவே, எமது சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கான சிறந்த வழிகாட்டலை முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கெள்கிறேன்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK