அனுராதபுர மாவட்ட அரசியல் வரலாற்றில் 67 வருடங்களுக்குப்பின் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்த என்னை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தியில்  முதலாம் இடத்தை பெற்ற முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற இரண்டாவது சாதனையினை படைப்பதற்கு உறுதுணையாக அமைந்த அனுராதபுர வாழ் தங்க மக்களுக்கு நான் உயிர் துறக்கும் வரை கடனாளி என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கன்னிப்பாராளுமன்ற அமர்வுக்கு செல்வத்துக்கு முன்னர் ஊடகங்களுக்கு   இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு மக்கள் எனக்கு அளித்த வரத்திற்கு அமைய எனக்கு கிடைத்த ஐந்து வருடத்தில் என்னால் முடிந்தளவு சேவையினை அனுராதபுர வாழ் மக்களுக்கு இன, மத கட்சி வேறுபாடுகளை மறந்து செய்தேன். அதற்கான பிரதிபலனே இம்முறை தேர்தலில் எனக்கு கிடைத்த வெற்றி என உறுதியாக நம்புகிறேன்.

மக்கள் தற்போது தெளிவு பெற்றுவிட்டார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வந்து முதலைக்கண்ணீர் வடித்து மக்களின் வாக்குகளை சூரையாடிச்செல்லும் அரசியல்வாதிகளை மக்கள் ஓரம் கட்டிவிட்டார்கள். தாம் அளித்த வாக்குகளுக்கு பயனை பெற்றுத்தரக்கூடிய, சுயநலம் மறந்து சேவை செய்யக்கூடிய, இலகுவாக மக்களால் சந்திக்க முடியுமான இளம் தலைவர்கலேயே மக்கள் விரும்புகின்றார்கள். இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் அதற்கு சான்றாக அமைகிறது.

மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்து இரண்டாவது முறையாகவும் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பியமைக்கு அனுராதபுர வாழ் சகல இன மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு எனக்கு கிடைத்த இந்த ஐந்து வருடத்தினையும் மக்களுக்காக முழுநேர அர்ப்பணிப்போடு சேவையாற்றுவேன் என்பதனை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடார்.