தர்கா நகர் அதிகாரிகொட பகுதியில் நிலவிய முறுகல் நிலையை அவதானித்து அந்தவிடயத்தை சுமுகமாக தீர்த்துவைக்க ஸ்தலத்திற்கு சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பேருவளை அமைப்பாளரும் பேருவளை பிரதேச சபை உறுப்பினரும்  ஹஷீப் மரைக்கார் விசேட அதிரடிப்படையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் களுத்துறை பிரதேச சபை உறுப்பினர்  ஹிஷாம் சுகைல் தெரிவித்ததாவது   இரு சமூகங்களுக்கிடையிலான பொதுவான பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசுவதற்கு பதிலாக அடாவடித்தனங்களை அரங்கேற்றி பீதியை உருவாக்கினால் ஏற்கனவே அச்சப்பட்டிருக்கும் சிறுபான்மை சமூகங்கள் மேலும் அரசிலிருந்து தூரமாவதை தடுக்கமுடியாது. மக்கள் பிரதிநிதிக்கே இப்படியான நிலையெனில், பொதுமக்களின் நிலை என்னவென்ற கருத்து மக்களிடம் நிலவுகிறது. அரசியல் வேறுபாடுகளுக்காக மாற்றுத்தரப்பு குறிவைக்கப்படுவது ஜனநாயகத்தை நேசிப்போருக்கான மிகப் பெரும் அச்சுறுத்தாலாகும். எமது கட்சியின் தேர்தல் செயல்பாடுகளை எப்படியெல்லாம் வேண்டுமோ அப்படியெல்லாம் முடக்கி வெற்றியை தடுப்பதற்கு அரச இயந்திரம் எவ்வாறு செயல்பட்டது என்பதை இந்த நாடு அறியும். ஆனாலும் சமூகத்தின் கணிசமான வாக்குகளை எமது வேட்பாளர்கள் பெற்று கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இதனால் இந்த அரசுக்கு இது போன்ற கைதுகளை செய்யவேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆகவே உள்நோக்கத்துடனான இந்த சட்டவிரோத கைதை கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. பொலீசார் பக்கசார்பாக அன்றி நீதி நியாயத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பொலீசார்மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் ஏற்படாது. ஒத்துழைப்பும் கிடைக்காது. ஆகவே சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துமாறு பொலீசாரை கேட்டுக் கொள்கின்றோம்.

ஹிஷாம் சுஹைல்
களுத்துறை நகரசபை உறுப்பினர்